”ஸ்ரீவைகுண்டம் எப்படி இருக்கு?”: உதயநிதியிடம் விசாரித்த நல்லகண்ணு

Published On:

| By christopher

விடுதலைப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவருமான ‘தகைசால் தமிழர்’ அய்யா நல்லகண்ணு இன்று (டிசம்பர் 26) தனது 99ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எந்தவித வேறுபாடும் இன்றி அனைத்து கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் சென்னையில் அவரது இல்லத்தில் வசித்து வரும் அய்யா நல்லக்கண்ணுவை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அப்போது விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவனும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பின் போது மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தனது சொந்த தொகுதியான ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்று வரும்  மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அய்யா நல்லகண்ணு கேட்டறிந்துள்ளார்.

ADVERTISEMENT

அவருக்கு பிறந்தநாள் பரிசாக கவிஞர் கருணானந்தம் எழுதிய ’தந்தை பெரியார்’ புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

ADVERTISEMENT

வெள்ள பாதிப்பு, நிவாரண பணிகளை கேட்டறிந்தார்!

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ள பதிவில், “விடுதலைப் போராட்டத் தியாகியும் – முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவருமான ‘தகைசால் தமிழர்’ அய்யா நல்லகண்ணு அவர்களின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை நேரில் இன்று வாழ்த்தினோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணங்கள் – முதற்கட்ட இழப்பீடுகளை வழங்கி வந்துள்ள நிலையில், அங்குள்ள கள நிலவரங்களை அய்யா அக்கறையுடன் கேட்டறிந்தார்கள். அங்கு, இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க கழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விளக்கிக் கூறினோம்.

போராட்டக் குணம், எளிமை, ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதி என இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான அய்யா நல்லகண்ணு அவர்கள் நூற்றாண்டையும் கடந்து மேலும் பல்லாண்டுகள் நமக்கெல்லாம் வழிகாட்டட்டும். அய்யா அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

Nallakannu Birthday,பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட வழிகாட்டி நல்லக்கண்ணு: ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து! - chief minister mk stalin personally met comrade nallakannu and wished him on ...

என்றும் வழிநடத்திட வேண்டும்!

முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், “99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு , நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு கடந்து மக்கள் பணி!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில்”எளிமையான வாழ்க்கை மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கு உதாரணமாக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முதுபெரும் அரசியல்வாதி அன்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நதிநீர் உரிமைகள் மீட்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக இன்றளவும் போராடிக் கொண்டிருக்கும் போராளி ஐயா நல்லகண்ணு அவர்கள் பூரண உடல்நலத்துடன் நூற்றாண்டு கடந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவர்!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தனது வாழ்த்துக்குறிப்பில், ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணுவுக்கு 98 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருப்பவர். தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, தமிழ்நாடு முன்னேற அயராது பாடுபடுபவர். பொது வாழ்க்கையில் நேர்மை, எளிமையைப் பின்பற்றுபவர். ஐயா நல்லக்கண்ணு நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!

விசாரணைக்கு ஆஜராகாத ED அதிகாரிகள்: போலீஸ் எடுத்த முக்கிய முடிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share