வெயிலால் சருமம் கருப்பாகிவிட்டதா?.. கவலை வேண்டாம்.. சூப்பர் ஃபேஸ் பேக் லிஸ்ட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Homemade Face packs remove skin darkening caused by sun

வெயிலால் சருமம் கருப்பாகிவிட்ட நிலையில் அதனை ஆரோக்கியமாக பராமரிக்க சில ஃபேஸ் பேக்குகளைப் (Face Packs) பார்ப்போம்.

தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் வெயிலால் சருமப் பிரச்சனை ஏற்படுவதைக் காண முடிகிறது. வெயிலில் அதிக நேரம் இருப்பது நமது சருமத்தைக் கருமையாகவும், பொலிவிழந்தும், எரிச்சலுடனும் தோற்றமளிக்கச் செய்யும். இதற்காக நாம் விலை உயர்ந்த கிரீம்கள், லோஷன்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். பலர் பியூட்டி பார்லர்களுக்கு சென்று தங்களது முக அழகை பாதுகாத்துக்கொள்கிறார்கள். அதே சமயம்  வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சில எளிய ஃபேஸ் பேக்குகள் (homemade face packs), வெயிலில் பாதிக்கப்பட்ட சருமத்தை மீண்டும் பொலிவாக்க உதவுகிறது. அத்துடன் உங்கள் முகம் பிரகாசமாக்கவும், மிகவும் தேவையான ஈரப்பதத்தை வழங்கவும் உதவிபுரிகிறது.

ADVERTISEMENT
கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

கற்றாழை ஜெல் மற்றும் வெள்ளரிக்காய் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு இதமளிக்கும் கலவையாகும். வெள்ளரிக்காயை விழுதாக அரைத்து, அதை கற்றாழை ஜெல்லுடன் (Aloe Vera and Cucumber Face Pack) கலக்க வேண்டும். இதனை முகத்தில் 15-20 நிமிடங்கள் பூசி பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் ஏற்படும் கருமையை குறைத்து, புத்துணர்ச்சியூட்டுகிறது.

தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக்

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை மென்மையாக உரித்தெடுக்கிறது. அதே சமயம், தேன் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாகும், இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது. இரண்டு மேசைக்கரண்டி (Yogurt and Honey Face Pack) சாதாரண தயிருடன் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து, முகத்தில் சமமாகப் பூச வேண்டும். அதனை அப்படியே விட்டுவிட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் ஜொலிஜொலிக்கும் சருமத்தை பெற முடியும்.

ADVERTISEMENT
கடலை மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்

சருமப் பராமரிப்பில் கடலை மாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. பாரம்பரியமாக சருமப் பராமரிப்புக்கு உதவும் கடலை மாவு அசுத்தங்களை நீக்க உதவிபுரிகிறது. அதே சமயம் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் (Besan and Milk Face Pack) சருமத்தின் தன்மையை மேம்படுத்த உதவக்கூடும். கடலை மாவு மற்றும் பாலைப் பயன்படுத்தி ஒரு மென்மையான பசையைத் தயாரித்து அதை உங்கள் முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். இப்படி செய்தால் சருமத்தின் கருமை நீங்கி பிரகாசமாக மாறும்.

தக்காளி மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

தக்காளியில் லைக்கோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அதே சமயம் தயிர் சருமத்தைக் குளிர்விக்க உதவுகிறது. ஒரு சிறிய தக்காளியை ஒரு தேக்கரண்டி தயிருடன் ( Tomato and Yogurt Face Pack) சேர்த்து அரைத்து 10-15 நிமிடங்கள் சருமத்தில் தடவி, பின்னர் மெதுவாகக் கழுவவும். சருமத்தில் வெடிப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது சென்சிட்டிவ் வாய்ந்ததாக இருந்தாலோ இந்த முறையைத் தவிர்க்கவும். ஏனெனில் தக்காளி எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

ADVERTISEMENT
பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்

பப்பாளியில் இறந்த சரும செல்களை மென்மையாக நீக்கும் பப்பைன் என்ற நொதி உள்ளது. இது சருமத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. சில துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளியை (Papaya and Honey Face Pack) ஒரு தேக்கரண்டி தேனுடன் சேர்த்து மசித்து, 15 நிமிடங்கள் முகத்தில் பூசவும். கழுவிய பிறகு உங்கள் சருமம் மென்மையாகவும், ஊட்டச்சத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

சந்தனம் என்பது சருமப் பராமரிப்பில் மிகவும் முக்கிய பங்கு (Sandalwood and Rose Water Face Pack) வகிக்கிறது. அதன் குளிர்ச்சியூட்டும் பண்புகளுக்காக சருமத்தை பராமரிக்க உதவுகின்றன. சந்தனத்தை பொடியாக்கி தேவையான அளவு ரோஸ் வாட்டருடன் கலந்து பசைபோல் ஆக்க வேண்டும். 15 நிமிடங்கள் பூசி பின்னர் கழுவி விடவும். இது உங்கள் சருமத்தைப் புத்துணர்ச்சியாகவும் லேசாகவும் உணர வைக்கும்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share