சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் நேற்று இரவு (ஆகஸ்ட் 8) நடைபெற இருந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசையை முறுக்கு 2’ படத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சி கூட்ட நெரிசல் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி.. தமிழின் ராப் இசை பாடகர். ‘வணக்கம் சென்னை’ படத்தில் ஹிப்ஹாப் கலைஞராக அறிமுகமானார். ‘ஆம்பள’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குநர் பிளஸ் நாயகனாகவும் உருவெடுத்தார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

மீசைய முறுக்கு -2 படத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று இரவு சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி இந்த நிகழ்ச்சிக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி சென்றிருந்தாலும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வெள்ளம் போல திரண்டது. இதனால் அவரால் மேடை ஏறவும் முடியவில்லை.
இதே நிலைமை நீடித்தால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்படும்; அசம்பாவிதங்கள் நிகழக் கூடும் என போலீசார் எச்சரித்ததால் நிகழ்ச்சியையே ரத்து செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
இதன் பின்னர் நேற்று இரவு வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டு, “உங்கள் அனைவரையும் சந்திக்க மிகுந்த ஆவலோடு வந்திருந்தேன். ஆனால் உங்களுடைய பாதுகாப்பு கருதியும், காவல் துறையின் அறிவுறுத்தலின் படியும் என்னால் மேடை ஏற முடியவில்லை. உங்கள் கட்டுக்கடங்காத அன்பு ஒரு புறம் மகிழ்ச்சி தந்தாலும், உங்களோடு #meesayamurukku2 வை கொண்டாட முடியவில்லை என்பதில் மிகுந்த வருத்தம்” என தெரிவித்துள்ளார்.
