விமான நிலையத்தில் இந்தி நீக்கம்!

Published On:

| By Minnambalam Desk

Hindi removed at Bengaluru's Kempegowda Airport

பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய அறிவிப்புப் பலகைகளிலிருந்து இந்தி நீக்கப்பட்டு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. Hindi removed at Bengaluru’s Kempegowda Airport

இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து தொடர்ச்சியான எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவின் மற்றொரு மாநிலமான கர்நாடகாவிலும் இந்தி திணிப்பிற்கு எதிராக வலுவான குரல்கள் எழுந்து வருகின்றன.

மெட்ரோ ரயில் போன்ற பொது இடங்களில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் கன்னட அமைப்புகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன.

சமீபத்தில் இந்தி மொழி பாடத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள சில பள்ளி மாணவர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள்.

இதனிடையே கர்நாடகாவின் மிகப்பெரிய விமான நிலையமான அதன் தலைநகர் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் அறிவிப்பு பலகையில் சத்தமே இல்லாமல் இந்தி மொழி அதிரடியாக நீக்கப்பட்டு கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தற்போது உள்ளது.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கன்னட மொழியின் பயன்பாடு மிகக் குறைந்த அளவில் உள்ளதை அங்குள்ள கன்னடர்களும், கன்னட அமைப்பினரும் மிகப்பெரிய அளவில் கவலை கொள்கின்றனர்.

பெங்களூர் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் கன்னடர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள காரணத்தினால் அங்கே பூர்வீக மொழியான கன்னடத்தின் பயன்பாடு மிக குறைவாக உள்ளது.

இதனிடையே தான் பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இந்தி அறிவிப்பை அதிரடியாக நீக்கியதை சமூக வலைதளங்களில் கன்னட அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

எனினும் இந்தி நீக்கப்பட்டது தொடர்பாக இதுவரை விமான நிலைய நிர்வாகம் எந்த விதமான அதிகாரப்பூர்வமான விளக்கமும் அளிக்கவில்லை.

– விஷால் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share