மின்சார இருசக்கர வாகன சந்தையில் தனது பிடியை மேலும் வலுப்படுத்தும் வகையில், Ather Energy நிறுவனத்தில் கூடுதலாக ரூ.1,758 கோடியை முதலீடு செய்துள்ளது Hero MotoCorp.
பிளாக் டீல் மூலம் சுமார் 1.19 கோடி Ather பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.1,480 என்ற சராசரி விலையில் Hero MotoCorp வாங்கியுள்ளது. இந்தப் பங்குகள் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் சுமார் 3.9% ஆகும்.
பங்குகளை விற்ற சிங்கப்பூர் அரசு
இந்தப் பிளாக் டீலில் Ather Energy பங்குகளை சிங்கப்பூர் அரசு விற்பனை செய்ததாக பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கைமாறிய பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.1,758.2 கோடியாக உள்ளது.
இந்த முதலீட்டுக்கு முன்பு Ather Energy-ல் Hero MotoCorp-ன் பங்கு 29.88% ஆக இருந்தது. தற்போது மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை மூலம் அதன் பங்களிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே ரூ.1,000 கோடி முதலீடு
Ather நிறுவனத்தில் Hero MotoCorp தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருகிறது. கடந்த மாதமும் 1%க்கும் அதிகமான பங்குகளை வாங்குவதற்காக சுமார் ரூ.1,000 கோடியை முதலீடு செய்திருந்தது.
இதற்கிடையே, Ather Energy சமீபத்தில் ரூ.1,200 கோடி மதிப்பிலான முன்னுரிமைப் பங்கு வெளியீட்டுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
வாரண்டுகளிலும் முதலீடு
இந்த நிதி திரட்டலில் India-Japan Fund நிறுவனத்துக்கு சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான பங்குகளும், Hero MotoCorp-க்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான மாற்றத்தக்க வாரண்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவை எதிர்காலத்தில் பங்குகளாக மாற்றப்படும்போது Hero-வின் Ather பங்களிப்பு மேலும் உயரும்.
இந்த செய்தி வெளியான நிலையில் Ather Energy பங்கு 4.6% உயர்ந்து ரூ.1,563.50-ல் வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் பங்கு சுமார் 30% உயர்ந்துள்ளது.
