அப்பல்லோ டயர்ஸ் பங்கில் நேற்று நடந்த மிகப்பெரிய பிளாக் டீல் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ப்ரீ-மார்க்கெட் வர்த்தகத்தில் நிறுவனத்தின் சுமார் 2.1 கோடி பங்குகள் கைமாறியுள்ளன. இது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 3.37 சதவீதமாகும். இந்தப் பரிவர்த்தனையின் மதிப்பு சுமார் ரூ.930 கோடி என சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பங்குகளை வாங்கியவர்கள் மற்றும் விற்றவர்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
பங்கின் மதிப்பீட்டை உயர்த்திய UBS
இந்த பிளாக் டீல் நடந்த அதே நேரத்தில் அப்பல்லோ டயர்ஸ் பங்கு குறித்து UBS-ன் பார்வையும் கவனம் பெற்றுள்ளது. இதுவரை Neutral மதிப்பீட்டில் இருந்த UBS, தற்போது Buy என தனது பரிந்துரையை மாற்றியுள்ளது.
மேலும், பங்குக்கான இலக்கு விலையை ரூ.580-ல் இருந்து ரூ.590 ஆக உயர்த்தியுள்ளது. UBS-ன் கணிப்பின்படி, தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிடும்போது இதில் கணிசமான உயர்வு வாய்ப்பு உள்ளது.
இந்தியா, ஐரோப்பா சந்தையில் நம்பிக்கை
மற்ற டயர் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அப்பல்லோ டயர்ஸ் இன்னும் குறைந்த மதிப்பீட்டில் வர்த்தகமாகிறது என்று UBS தெரிவித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் டயர் துறையைச் சேர்ந்த பிற நிறுவனங்களை விட பங்கின் செயல்பாடும் பின்தங்கியிருந்தது.
இருப்பினும், இந்தியச் சந்தையில் நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்த நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பலன் தரும் என UBS எதிர்பார்க்கிறது. ஐரோப்பிய வணிகத்திலும் முன்னேற்றத்துக்கான வாய்ப்பு இருப்பதாக தரகு நிறுவனம் கருதுகிறது.
ரப்பர் விலை உயர்வு எச்சரிக்கை
அப்பல்லோ டயர்ஸுக்கு உடனடி சவாலாக இருப்பது மூலப்பொருள் செலவுதான். FY27 முதல் காலாண்டில் இயற்கை ரப்பர் விலை முந்தைய காலாண்டை விட 22 சதவீதம் உயர்ந்துள்ளதால், இரண்டாவது காலாண்டிலும் அழுத்தம் தொடரலாம் என UBS கணித்துள்ளது. ஆனால் இந்தச் செலவு அழுத்தம் குறைந்த பிறகு நிறுவனத்தின் வருவாய் வேகமாக மீளும் வாய்ப்பு இருப்பதாக UBS கூறுகிறது.
FY28-ல் EBITDA 21 சதவீதம் வளரலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது. இதனால், தற்போதைய விலையில் நிறுவனத்தின் நடுத்தரகால வளர்ச்சி வாய்ப்பு முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்பது UBS-ன் கருத்தாக உள்ளது.
