99.97 சதவீதம் குறைந்த கடன் மீட்பு
எஸ்ஸல் குழும நிறுவனர் சுபாஷ் சந்திராவின் தனிநபர் திவால் வழக்கில், கடனளிப்பவர்களுக்கு ரூ.22,006.57 கோடி அளவுக்கு ஏற்கப்பட்ட கோரிக்கைகள் இருந்த நிலையில், ரூ.6.25 கோடியை மட்டுமே திருப்பிச் செலுத்தும் திட்டத்துக்கு தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT) ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் கடனளிப்பவர்களுக்கு கிடைக்கும் தொகை, மொத்தமாக ஏற்கப்பட்ட கோரிக்கைகளில் சுமார் 0.028 சதவீதமாக மட்டுமே இருக்கும். அதாவது, கிட்டத்தட்ட 99.97 சதவீதம் அளவுக்கு கடன் தொகை குறைக்கப்படுகிறது.
ரூ.170 கோடி கடனில் தொடங்கிய வழக்கு
விவேக் இன்ஃப்ராகானுக்கு வழங்கப்பட்ட ரூ.170 கோடி கடனுக்கு சுபாஷ் சந்திரா தனிப்பட்ட உத்தரவாதம் அளித்திருந்தார். அந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்படாமல் போனதைத் தொடர்ந்து, இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் 2022-ல் IBC சட்டத்தின் கீழ் NCLT-ஐ அணுகியது.
இந்த வழக்கு 2024-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் சுபாஷ் சந்திரா முன்வைத்த repayment plan தொடர்பாக NCLT உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துகள் ஏற்பட்டதால், மூன்றாவது உறுப்பினர் நியமிக்கப்பட்டார்.
சில கோரிக்கைகள் நீக்கம்
ஆகஸ்ட் 25-ம் தேதி உறுப்பினர் நிலேஷ் சர்மா, repayment plan-க்கு ஒப்புதல் அளிக்கலாம் எனத் தீர்ப்பளித்தார். அதன்படி, கடனளிப்பவர்களுக்கு ரூ.6.25 கோடியும், insolvency resolution process செலவுகளுக்காக ரூ.25 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதார ஆவணங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட சில கோரிக்கைகளை கடனளிப்பவர்களின் பட்டியலில் இருந்து நீக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இறுதியாக வழங்கப்படும் தொகையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடனளிப்பவர்களின் எதிர்ப்பு என்ன?
LIC Housing Finance உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ரூ.1,322.39 கோடி கோரிக்கைக்கு வெறும் ரூ.38.09 லட்சம் மட்டுமே கிடைக்கும் என LIC Housing Finance சுட்டிக்காட்டியது.
அதேநேரம், ரூ.22,000 கோடி என்பது முழுமையாக சுபாஷ் சந்திரா தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டிய கடன் அல்ல; வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த கோரிக்கைகளின் மதிப்பே என அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பிச் செலுத்தும் திட்டம் எதிர்ப்புத் தெரிவித்த மற்றும் வாக்களிக்காத கடனளிப்பவர்களையும் கட்டுப்படுத்தும் என NCLT தெரிவித்துள்ளது. பெரும்பான்மை கருத்தை அமல்படுத்துவதற்கான இறுதி உத்தரவு அசல் அமர்வால் பிறப்பிக்கப்பட உள்ளது.
