தொலைத்தொடர்பு கட்டணம் 12% வரை உயருமா?

Published On:

| By Minnambalam Desk

நவம்பர், டிசம்பரில் கட்டண உயர்வு?

இந்திய தொலைத்தொடர்பு துறையில் அடுத்த சில மாதங்களில் மீண்டும் கட்டண உயர்வு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அடுத்த 4 முதல் 6 மாதங்களில், குறிப்பாக நவம்பர் அல்லது டிசம்பர் காலகட்டத்தில், மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் சராசரியாக 12 சதவீதம் வரை உயரக்கூடும் என சென்ட்ரம் இந்தியாவின் மூத்த துணைத் தலைவர் பியூஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

பொதுவாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2 முதல் 2.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணங்களை உயர்த்துகின்றன. கடந்த முறை ஜூலை 2024-ல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

வோடஃபோன் ஐடியாவின் நிலை என்ன?

கட்டண உயர்வு ஏற்பட்டால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாயில் முன்னேற்றம் ஏற்படலாம். இருப்பினும், வோடஃபோன் ஐடியா தற்போதைய மதிப்பீட்டில் அதிக விலையில் இருப்பதாக பாண்டே கருதுகிறார்.

ADVERTISEMENT

அதேநேரம், புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பு, ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாய் (ARPU) அதிகரிப்பு, 4ஜி மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்கள் எண்ணிக்கை உயர்வு ஆகியவற்றால் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.45,000 கோடி செலவிட திட்டம்

நெட்வொர்க் விரிவாக்கமே வோடஃபோன் ஐடியாவுக்கு தற்போது முக்கிய சவாலாக உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.45,000 கோடியை நெட்வொர்க் பணிகளுக்காக செலவிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆனால், நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு EBITDA சுமார் ரூ.10,000 கோடியாக இருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.35,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை வெளிநிதி தேவைப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

4ஜி, 5ஜி விரிவாக்கம் முக்கியம்

வங்கிகளிடமிருந்து தேவையான நிதி கிடைத்தால், குறிப்பாக 17 முக்கிய தொலைத்தொடர்பு வட்டங்களில் 4ஜி மற்றும் 5ஜி சேவையை விரிவுபடுத்த வோடஃபோன் ஐடியாவுக்கு உதவியாக இருக்கும்.

தற்போது நிறுவனத்தின் 4ஜி கவரேஜ் சுமார் 86 சதவீதமாக உள்ளது. இதேவேளையில், பார்தி ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் 4ஜி கவரேஜ் 90 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share