இந்தியாவின் கடல் போக்குவரத்து திறனை அதிகரிக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 கப்பல்களை இந்திய இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
தேசிய கப்பல் வாரியம் ஏற்பாடு செய்த ‘சாகர் சம்வாத்’ நிகழ்ச்சியில் அவர் இதை தெரிவித்தார்.
தற்போது இந்தியவின் கீழ் சுமார் 1,600 கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதன் மூலம், சரக்கு போக்குவரத்துக்காக வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் பெரும் தொகையை குறைக்க அரசு முயற்சி மேற்கொள்கிறது.
ஆண்டுக்கு 75 பில்லியன் டாலர் செலவு
இந்தியா ஆண்டுதோறும் சுமார் 75 பில்லியன் டாலரை வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு சரக்கு கட்டணமாக செலுத்துகிறது. கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, யூரியா உள்ளிட்ட முக்கியப் பொருட்களின் சரக்குப் போக்குவரத்துக்கும் இந்தச் செலவு ஏற்படுகிறது என்று மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதனால், உள்நாட்டு கப்பல் போக்குவரத்து நிறுவனங்களின் திறனை வளர்ப்பது அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்திய கப்பல் இயக்குவதில் சிக்கல்
எனினும், இந்தியாவின் கீழ் கப்பல்களை இயக்குவது வெளிநாட்டை விட 16 முதல் 20 சதவீதம் வரை அதிக செலவாகிறது என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கப்பல் இறக்குமதி மற்றும் பராமரிப்புக்கான வரிகள், மாலுமிகளின் ஊதியத்தில் விதிக்கப்படும் வரி, சரக்கு மீதான வரி, உள்நாட்டு நிதிச் செலவு உள்ளிட்டவை இதற்குக் காரணங்களாக கூறப்படுகின்றன.
5 அம்சத் திட்டம்
இந்தச் செலவு இடைவெளியை குறைக்க தேசிய கப்பல் வாரியம் 5 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளது.
வரி மற்றும் நிதி சீர்திருத்தம், உறுதியான சரக்கு ஆதரவு, போட்டித்திறன் கொண்ட கடன் வசதி, விதிமுறைகளை எளிமைப்படுத்துதல், தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்தால், இந்தியக் கப்பல் துறையின் போட்டித்திறன் அதிகரிப்பதுடன், வெளிநாட்டு சரக்கு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் நிலையும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
