UPI மூலம் பெரிய தொகையை அனுப்பினாலோ, பெற்றாலோ உடனே வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்துவிடும் என்ற தகவல் பலரிடமும் உள்ளது.
ஆனால், UPI பரிவர்த்தனைக்கு என தனியாக ஒரு வருமான வரி வரம்பு கிடையாது. பரிவர்த்தனையின் அளவைவிட, அந்த பணத்தின் மூலம் என்ன, எதற்காக அனுப்பப்பட்டது, வருமான வரிக் கணக்கில் அது சரியாகக் காட்டப்பட்டுள்ளதா என்பதுதான் முக்கியம்.
UPI-க்கு தனி SFT வரம்பு இல்லை
Statement of Financial Transactions எனப்படும் SFT விதிகளின் கீழ் குறிப்பிட்ட பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளை வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் UPI பரிவர்த்தனைக்கு மட்டும் தனியாக SFT வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.
அதனால், நண்பருக்கு பணம் அனுப்புவது, குடும்ப உறுப்பினருக்கு தொகை மாற்றுவது போன்ற வழக்கமான UPI பயன்பாடுகள் பெரிய தொகையாக இருந்தாலும் தானாகவே வரி நோட்டீஸுக்குக் காரணமாகாது.
எந்த பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படலாம்?
சேமிப்புக் கணக்கில் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்வது SFT-யில் தெரிவிக்கப்படலாம்.
நடப்புக் கணக்கில் ரொக்க டெபாசிட் அல்லது பணத்தை எடுப்பது ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தாலும் தகவல் தெரிவிக்கப்படும்.
அதேபோல், கிரெடிட் கார்டு மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் செலுத்துவது, ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் செய்யப்படும் சில முதலீடுகள், ரூ.30 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள சொத்து பரிவர்த்தனைகள் உள்ளிட்டவையும் அறிக்கையிடப்படலாம்.
நோட்டீஸ் வருவதற்கு முக்கிய காரணம் என்ன?
ஒருவரின் வங்கிக் கணக்கில் தொடர்ந்து அதிக அளவில் பணம் வருவது, ஆனால் அவரது வருமான வரிக் கணக்கில் அதற்கேற்ற வருமானம் காட்டப்படாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தலாம்.
உதாரணமாக, ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் காட்டும் ஒருவர், கணக்கில் பல முறை சேர்த்து ரூ.50 லட்சம் பெறுகிறார் என்றால், அந்தப் பணம் கடன், பரிசு, விற்பனை வருவாய் அல்லது வேறு சட்டபூர்வமான மூலத்திலிருந்து வந்தது என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் தேவைப்படலாம். UPI-யில் வந்தது என்பதால் அந்தப் பணத்திற்கு தனி வரிச் சலுகை கிடையாது.
AIS-ஐ சரிபாரிப்பது ஏன் முக்கியம்?
வருமான வரித்துறையிடம் கிடைக்கும் தகவல்களை Annual Information Statement (AIS) மூலம் வரி செலுத்துவோர் பார்க்க முடியும். ITR தாக்கல் செய்வதற்கு முன்பு AIS, Form 26AS, வங்கி அறிக்கைகள், முதலீட்டு விவரங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.
முக்கியமாக, “ரூ.10 லட்சத்தைத் தாண்டினால் மட்டுமே வரி வரும்” என்பது தவறான புரிதல். SFT வரம்பு என்பது தகவல் தெரிவிக்கும் வரம்பு; அது நேரடியாக வரி விதிக்கப்படும் வரம்பு அல்ல.
SEO Tags:
UPI பரிவர்த்தனை, வருமான வரி, Income Tax, UPI Tax Rules, SFT Rules, AIS, Income Tax Notice, பெரிய UPI பரிவர்த்தனை, வங்கி பரிவர்த்தனை, வருமான வரி விதிகள்
