கடன் வாங்கும்போது வங்கிகள் கவனிக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்று கிரெடிட் ஸ்கோர்.
இதைச் சுற்றி பல தகவல்கள் சமூக வலைதளங்களிலும், நண்பர்கள் மத்தியிலும் பரவி வருகின்றன. ஆனால் அவற்றில் சில உண்மைக்கு மாறானவை. இதனால் கடன் பெற முயற்சிப்பவர்கள் தேவையில்லாமல் குழப்பமடைகின்றனர்.
கிரெடிட் ஸ்கோரை நாமே பார்த்தால் குறையுமா?
நம்முடைய கிரெடிட் ஸ்கோரை நாமே சரிபார்ப்பதால் அது குறையாது. இதை Soft Inquiry என்று கூறுகிறார்கள். ஆனால் வங்கி அல்லது நிதி நிறுவனம் கடன் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது மேற்கொள்ளும் Hard Inquiry கிரெடிட் ஸ்கோரில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே சொந்தமாக ஸ்கோரை பார்ப்பதற்கு பயப்பட வேண்டியதில்லை.
கடன் வாங்காதவர்களுக்கு எளிதில் லோன் கிடைக்குமா?
கடன் அல்லது கிரெடிட் கார்டு எதையும் பயன்படுத்தாமல் இருந்தால் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்கும் என்று நினைப்பதும் தவறு. கடன் வரலாறு இல்லாததால், ஒருவர் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவாரா என்பதை வங்கிக்கு மதிப்பிடுவது சிரமமாக இருக்கலாம். இதனால் சில நேரங்களில் விண்ணப்பமே நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதிக சம்பளம் என்றால் அதிக ஸ்கோரா?
அதிக வருமானம் இருந்தாலே கிரெடிட் ஸ்கோர் அதிகமாகிவிடாது. ஒருவர் சம்பளம் எவ்வளவு வாங்குகிறார் என்பதைக் காட்டிலும், ஏற்கனவே பெற்ற கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு தவணைகளை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதுதான் முக்கியம்.
பழைய கார்டு, Carry Balance பற்றிய உண்மை
பழைய கிரெடிட் கார்டை மூடுவது ஸ்கோரை தானாக உயர்த்தாது. மாறாக, மொத்த கடன் வரம்பு குறைந்தால் Credit Utilisation Ratio அதிகரிக்கலாம். அதேபோல், கிரெடிட் கார்டு பாக்கியை அடுத்த மாதத்துக்கு எடுத்துச் செல்வதால் ஸ்கோர் உயரும் என்பது தவறான கருத்து. நிலுவையைச் சரியான நேரத்தில் செலுத்தி, கிடைக்கும் கடன் வரம்பில் குறைந்த அளவைப் பயன்படுத்துவது நல்ல நடைமுறையாகும்.
