வங்கிக் கணக்கில் இருந்து நமக்குத் தெரியாமல் பணம் கழிக்கப்பட்டாலோ, வங்கி தரப்பில் ஏற்பட்ட தவறால் தேவையற்ற தொகை பிடித்தம் செய்யப்பட்டாலோ பதற்றப்பட வேண்டியதில்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு வாடிக்கையாளர்கள் புகார் அளித்து தீர்வு பெறுவதற்கான நடைமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.
முதலில் வங்கியிடம் புகார் கொடுக்க வேண்டும்
கணக்கில் இருந்து தவறாக பணம் எடுக்கப்பட்டதை கவனித்தவுடன் சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம், கிளை அல்லது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்க வேண்டும். பணம் கழிக்கப்பட்ட தேதி, தொகை, பரிவர்த்தனை விவரம் உள்ளிட்ட ஆதாரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்.
அனுமதியில்லாத மின்னணு பரிவர்த்தனை என்றால், தாமதிக்காமல் வங்கிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கியின் தவறு அல்லது சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளருக்கு பொறுப்பு இல்லை என்று RBI விதிகள் குறிப்பிடுகின்றன.
30 நாட்களுக்குள் பதில் வர வேண்டும்
வங்கியிடம் புகார் அளித்த பிறகு அதன் முடிவை எதிர்பார்க்க வேண்டும். RBI-யின் ஒருங்கிணைந்த குறைதீர் நடைமுறையின்படி, வங்கி 30 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றாலோ அல்லது வழங்கிய தீர்வு திருப்திகரமாக இல்லையென்றாலோ RBI Ombudsman-ஐ அணுகலாம்.
RBI Ombudsman மூலம் புகார்
இதற்காக RBI-யின் Complaint Management System (CMS) தளத்தில் ஆன்லைனில் புகார் பதிவு செய்யலாம். வங்கியிடம் அளித்த புகார், பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை இணைக்க வேண்டும். புகார் பதிவு செய்ததும் கிடைக்கும் குறிப்பு எண்ணை வைத்து அதன் நிலையைத் தொடர்ந்து பார்க்க முடியும்.
அனுமதியில்லாத மின்னணு பரிவர்த்தனை தொடர்பான தகுதியான வழக்குகளில், வாடிக்கையாளர் புகார் அளித்த பிறகு 10 வேலை நாட்களுக்குள் தொகையை கணக்கில் தற்காலிகமாக வரவு வைக்க வேண்டும் என்றும் RBI விதிகள் கூறுகின்றன.
