டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தை (AGM) நடத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18-ம் தேதி போதிய குவாரம் இல்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நிறுவனப் பதிவாளர் (Registrar of Companies) இந்த அவகாசத்தை வழங்கியுள்ளார்.
வரலாற்றில் முதல்முறை
டாடா சன்ஸ் வரலாற்றிலேயே ஏஜிஎம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, அதை நடத்த கூடுதல் அவகாசம் கோரப்படுவது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கலைத் தீர்க்க நிறுவனத்துக்கு கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது.
ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்றிருக்க வேண்டிய ஏஜிஎம்மில் தேவையான குவாரம் கிடைக்கவில்லை. சர் ரத்தன் டாடா டிரஸ்ட் (SRTT) தொடர்பாக மகாராஷ்டிரா அறநிலைய ஆணையர் விதித்திருந்த கட்டுப்பாடுகளே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தன.
டாடா டிரஸ்ட்களின் சிக்கல்
SRTT மற்றும் சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட் (SDTT) ஆகிய இரண்டும் இணைந்து டாடா சன்ஸ் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ளன. SRTT மீது விசாரணை நிலுவையில் இருப்பதால், அந்த அறக்கட்டளைக்கு கூட்டங்கள் நடத்தவும் முடிவுகளை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, இரு டிரஸ்ட்களும் இணைந்து நியமித்த பிரதிநிதி ஏஜிஎம்மில் பங்கேற்க முடியவில்லை. இதுவே குவாரம் குறைவதற்கும் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதற்கும் வழிவகுத்தது.
சந்திரசேகரன் பதவிக்கு என்ன ஆகும்?
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனின் பதவியும் இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் சுழற்சி முறையில் ஓய்வு பெற வேண்டிய இயக்குநராக இருந்தாலும், ஏஜிஎம் முறையாக நடைபெறாத நிலையில் அவரது மறுநியமனம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.
அவரது தற்போதைய தலைவர் பதவி பிப்ரவரி 2027-ல் முடிவடைய உள்ளது. மேலும், அந்தப் பதவிக்கு மீண்டும் வர விரும்பவில்லை என அவர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
அறநிலைய ஆணையர் SRTT மீதான கட்டுப்பாடுகளை நீக்கினால், 3 மாத கால அவகாசம் முடிவதற்குள் கூட டாடா சன்ஸ் ஏஜிஎம்மை நடத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் சிறுபான்மை பங்குதாரர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
