தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கும் நிலையில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நான்கு மாவட்ட நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அதில், ‘தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிககனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிககனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
