அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு பேரிடியாக இருந்த அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் H1B விசா கட்டண உயர்வை அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
H-1B விசா என்பது அமெரிக்க நிறுவனங்கள், தங்கள் நாட்டுப் பணியாளர்களிடம் இல்லாத சில ‘சிறப்புத் திறன் சார்ந்த’ பணிகளுக்காக வெளிநாட்டு பணியாளர்களை தற்காலிகமாக வேலைக்கு அமர்த்திக் கொள்ள அமெரிக்க அரசு வழங்கும் ஒரு தற்காலிக குடியேற்றமற்ற (Non-immigrant) விசா.
இதற்கு விண்ணப்பிப்பவர் குறைந்தபட்சம் ஒரு இளங்கலை அல்லது அதற்கு இணையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்த H1B விசா, பொதுவாக 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். பின்னர் இதனை அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்த விசாவை உலகிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்துவது இந்திய ஐடி ஊழியர்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான Infosys, TCS, Wipro போன்றவை. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி நிறுவனங்களான Google, Microsoft ஆகியவையும் இந்த விசாவை அதிகம் பயன்படுத்துகின்றன.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, குடியேற்றக் கொள்கைகளில் தீவிரமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் 2025-ல் ஒரு புதிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.
அதாவது, வெளிநாட்டில் இருந்து புதிய பணியாளர்களை H-1B விசா மூலம் அமெரிக்காவிற்குள் அழைத்து வர விரும்பும் நிறுவனங்கள், ஒவ்வொரு விசா விண்ணப்பத்திற்கும் $100,000 (சுமார் ₹83 லட்சம்) கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டார்.
இதற்கு முன்பு வரை நிறுவனங்கள் செலுத்தி வந்த விசா கட்டணம் வெறும் $2,000 முதல் $5,000 (சுமார் ₹1.6 லட்சம் முதல் ₹4.1 லட்சம்) வரை மட்டுமே இருந்தது. இந்தத் திடீர் கட்டண உயர்வு அமெரிக்க நிறுவனங்களுக்கும், இந்திய ஊழியர்களுக்கும் பேரிடியாக அமைந்தது. இதனால் புதிய விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாகிவிட்டது.
டிரம்ப் நிர்வாகம் இந்தக் கட்டண உயர்வுக்குப் பின்னால் பல அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களை முன்வைத்தது. விசா கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்தினால், நிறுவனங்கள் வெளிநாட்டினரை வேலைக்கு எடுப்பதைத் தவிர்த்து, உள்ளூர் அமெரிக்கர்களுக்கே அந்த வேலைகளைக் கொடுப்பார்கள் என்பது டிரம்ப்பின் கணக்கு.
குறைவான ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் கிடைப்பதால், தகுதியான அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும், H-1B திட்டம் “துஷ்பிரயோகம்” செய்யப்படுவதாகவும் டிரம்ப் வாதிட்டார்.
சட்டப்பூர்வமாக நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி H-1B விசாவை நேரடியாக ரத்து செய்ய முடியாது. எனவே, கட்டணத்தை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தினால், நிறுவனங்களே பயந்து போய் விண்ணப்பிக்க மாட்டார்கள்; இதனால் மறைமுகமாக விசா முறையை முடக்கலாம் எனத் திட்டமிடப்பட்டது.
டிரம்பின் இந்த அதிரடி உத்தரவை எதிர்த்து கலிபோர்னியா உள்ளிட்ட 20 அமெரிக்க மாகாணங்களின் டெமாக்ரடிக் கட்சி அட்டர்னி ஜெனரல்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பாஸ்டன் நீதிமன்ற நீதிபதி லியோ சொரோகின் இந்த உத்தரவைச் சட்டவிரோதமானது என்று கூறி ரத்து செய்தார்.
மேலும், அரசு தரப்பில் இது ஒரு “அபராதம்/கட்டணம்” என்று கூறப்பட்டாலும், நீதிபதி இதனை நிராகரித்தார். இது பெயரளவில் கட்டணம் என்றாலும், நடைமுறையில் இது ஒரு வரியைப் போன்றது. அமெரிக்க அரசியலமைப்பின்படி, புதிய வரிகளை விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு. அதிபர் தனது நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையாக வரி விதிக்க முடியாது.
இந்த உத்தரவு மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கிராமப்புறப் பள்ளிகளில் பெரும் ஆசிரியர் மற்றும் மருத்துவர் பற்றாக்குறையை உருவாக்குகிறது என்று மாகாணங்கள் நிரூபித்தன. ஏனெனில் இத்துறைகளும் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை நம்பியே உள்ளன” என்றும் நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
இந்த நீதிமன்றத் தீர்ப்பு டொனால்ட் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், இது இந்தியத் தொழில்நுட்பத் துறைக்கும், அமெரிக்காவில் பணிபுரியக் கனவு காணும் ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கும் மிகப்பெரிய நிம்மதியையும், புதிய வாய்ப்புகளையும் மீண்டும் திறந்துவிட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகம் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருந்தாலும், தற்போதைக்கு இந்த “கொடூர கட்டண முறை” முடக்கப்பட்டுள்ளது என்பதுதான் நிம்மதி.
