கூடலூரில் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் இறந்தவரின் உடலை உறவினர்களுக்கு காட்டாமல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் உறவினர்கள், வனத்துறையினர் மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் நாள்தோறும் யானைகள், புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வாடிக்கையாகியுள்ள நிலையில் அவ்வப்போது மனித விலங்கு மோதல் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் கூடலூர், ஓவேலி 4ம் கேட் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவர் நேற்று மாலை 3 மணிக்கு ஊருக்கு தண்ணீர் திறப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் இரவு முழுவதும் அவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை உறவினர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் பாலு புலி தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைக் கண்ட வனத்துறையினர் உடனடியாக பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உறவினர்களுக்கு காட்டாமல் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாலுவின் உறவினர்கள் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து கூடலூர் பகுதியில் வனவிலங்குகள் தாக்கி மனித உயிர்கள் பலியாகி வரும் சம்பவம் தொடர்கதையாக உள்ளதால் மனித வனவிலங்கு மோதலை தவிர்க்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
