நா.மணி
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம ஊராட்சியின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பலருக்கும் கிராம சபை ஒரு முக்கியமான ஜனநாயக நிகழ்வு.
சிலருக்கு அது ஒரு திருவிழாவைப் போன்றது. ஆனால், கிராம சபையின் உண்மையான அதிகாரம், நோக்கம், ஜனநாயகப் பொருள் ஆகியவற்றை நாம் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
கிராம சபைத் தீர்மானங்களின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசப்படுகிறது. ஆனால், நடைமுறையில் கிராம சபை மக்கள் தங்களுடைய கிராமத்தின் பிரச்சினைகளைத் தாங்களே அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளை விவாதித்து, அவற்றைத் தீர்மானங்களாக உருவாக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றுள்ளனரா? இந்தக் கேள்வியை நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது.
உள்ளாட்சி அமைப்பு, அரசியல், நிர்வாக, ஜனநாயக அமைப்பு

உள்ளாட்சி அமைப்பு என்பது அரசின் அடித்தட்டு நிர்வாக அமைப்பு மட்டுமல்ல. அது ஒரு அரசியல், நிர்வாக, ஜனநாயக அமைப்பு. மக்களுக்கும் அரசுக்கும் மிக அருகில் இருக்கும் ஆட்சி அமைப்பு.
ஒரு கிராமத்தில் குடிநீர் இல்லை என்றால் அதை முதலில் உணர்பவர்கள் அந்தக் கிராம மக்கள்தான். சாலை மோசமாக இருந்தால் அதை அன்றாடம் பயன்படுத்துபவர்களும் அவர்கள்தான்.
ஏரி, குளம், கால்வாய் அழிந்து கொண்டிருந்தால் அதன் பாதிப்பை முதலில் சந்திப்பவர்களும் அவர்கள்தான். பள்ளி, அங்கன்வாடி, சுகாதாரம், தெருவிளக்கு, கழிவுநீர், பொது இடங்கள், விவசாயம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் என ஒரு கிராமத்தின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பெரும்பாலான பிரச்சினைகளை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.
அப்படியானால், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பற்றியும் முதலில் விவாதிக்க வேண்டிய இடம் கிராம சபையாகத்தானே இருக்க வேண்டும்?
கிராம சபைகளில் கேட்க வேண்டிய அடிப்படை கேள்விகள்

ஒரு கிராம சபையில் மக்கள் கேட்க வேண்டிய அடிப்படையான கேள்விகளில் ஒன்று, “நமது ஊராட்சிக்கு இந்த ஆண்டு எவ்வளவு வருவாய் வந்தது? எங்கிருந்து வந்தது? எவ்வளவு செலவு செய்யப்பட்டது? எதற்காக செலவு செய்யப்பட்டது?” என்பதாக இருக்க வேண்டும்.
இதைக் கேட்பது அரசுக்கு எதிரான செயலல்ல. இது ஜனநாயகம். எந்தத் திட்டத்திற்கு எந்த நிதி வருகிறது? எந்தப் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? எந்த வேலை நிறைவேற்றப்பட்டது? எந்த வேலை நிறைவேற்றப்படவில்லை? நிதி இருந்தும் ஏன் வேலை நடைபெறவில்லை? ஒரு திட்டத்திற்கு நிதி கிடைக்கவில்லை என்றால் ஏன் கிடைக்கவில்லை? இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை கிராம சபை வழங்குகிறது.
கிராம சபைகளின் அதிகாரம் அறிவோம்
ஒரு கிராமத்தின் ஓராண்டு வரவு செலவை அதன் மக்கள் அறிந்து கொள்வது வெறும் கணக்கைப் பார்ப்பது அல்ல. அது, பொது நிதி மீது மக்களுக்கு இருக்கும் உரிமையைப் புரிந்து கொள்வதாகும்.
ஆனால், இந்த வாய்ப்பு எத்தனை கிராம மக்களுக்குத் தெரியும்? அதை பயன்படுத்திக் கேள்வி கேட்கும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது? இங்குதான் ஒரு மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது.
கிராம சபையின் அதிகாரம், செயல்பாடு, நிதி, திட்டங்கள், தீர்மானங்கள் குறித்து மக்கள் முழுமையாக அறிந்து கொள்ளாத நிலை வெறும் அலட்சியத்தின் விளைவா? அல்லது மக்கள் அறிந்து கொள்ளாமல் இருப்பதே சிலருக்கு வசதியாக இருப்பதால் உருவான நிலைமையா?
மக்கள் தங்கள் உரிமைகளை அறிந்து கொண்டால் கேள்விகள் கேட்பார்கள். கேள்விகள் கேட்டால் கணக்குகள் வெளிப்படும். கணக்குகள் வெளிப்பட்டால் பொறுப்புணர்வு அதிகரிக்கும். பொறுப்புணர்வு அதிகரித்தால் உள்ளாட்சி நிர்வாகம் மேம்படும். இதுதான் ஜனநாயகத்தின் இயல்பான பாதை.
கிராம சபைகளின் முக்கியத்துவம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது யார் பொறுப்பு?

கிராம சபை பற்றிய அறிவை மக்களிடம் கொண்டு செல்வது அரசின் கடமை மட்டுமல்ல. சமூகத்தின் அறிவார்ந்த பகுதிகளின் கடமையும் கூட.
ஒரு கிராமத்தில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதற்கான தீர்வு என்ன என்று மக்கள் விவாதிக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை கிராம சபை நிறைவேற்ற விரும்புகிறது. அந்தத் தீர்மானம் மேல்நிலை நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்காக மட்டுமே காத்திருக்க வேண்டிய ஒன்றாக மாறிவிட்டால், உள்ளாட்சியின் ஜனநாயகப் பொருள் எங்கே இருக்கிறது?
“எங்கள் கிராமத்தில் என்ன பிரச்சினை? அதற்கான தீர்வு என்ன? அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்?” என்பதைத் தீர்மானிக்கும் அளவுக்கு கிராம சபைக்கு உண்மையான ஜனநாயக இடம் கிடைக்க வேண்டும்.
இந்திய சுதந்திரத்தின் 80ஆவது ண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு கிராம மக்கள் தங்களுடைய சொந்தப் பிரச்சினையை அடையாளம் கண்டு, அதற்கான தீர்வை முன்வைத்து, அதனைச் செயல்படுத்துவதற்கான ஜனநாயகத் தீர்மானத்தை எடுப்பதில் ஏன் இன்னும் பல கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்?
இந்தக் கேள்வியை நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய காலம் இது
உள்ளாட்சியும் உலகளாவிய சிக்கல் தீர்வும்
இன்றைய உலகின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பருவநிலை மாற்றம். மற்றொன்று பல்லுயிர் இழப்பு. இதற்கான தீர்வு மாநகரங்களிலும் சர்வதேச மாநாடுகளிலும் மட்டும் கிடைக்கப் போவதில்லை.
ஒவ்வொரு கிராமத்திலும் நாம் என்ன செய்கிறோம் என்பதிலும் அதன் ஒரு பகுதி இருக்கிறது. ஒரு கிராமத்தின் மரங்களைப் பட்டியலிட முடியாதா? அங்கு காணப்படும் பறவைகள், பூச்சிகள், தாவரங்கள், நீர்நிலைகள், மண் உயிரினங்கள் போன்றவற்றைப் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு பதிவு செய்ய முடியாதா? அருகில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஒரு பல்லுயிர் பதிவேடு தயாரிக்க கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாதா?
முடியும்… அதற்கு மிகப்பெரிய நிதி தேவையில்லை. தேவை மக்கள் பங்கேற்பும், அறிவியல் அணுகுமுறையும், உள்ளாட்சி அமைப்பின் ஆதரவும் மட்டுமே.
ஒரு கிராமத்தின் இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்கான தீர்மானமே எதிர்கால தலைமுறைக்கான மிகப்பெரிய முதலீடாக இருக்க முடியும்.
உள்ளாட்சியை வளப்படுத்த நவீன அறிவியல் தொழில்நுட்பம்
இன்று நவீன அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஒரு தகவலை உலகம் முழுவதும் சில நொடிகளில் கொண்டு செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆனால், அதே தொழில்நுட்பம் பொய்யான தகவல்களையும் பரப்புகிறது.
தனி மனிதர்களை அமானுஷ்ய சக்தி கொண்டவர்களாக சித்தரிப்பதும், கட்டுக்கதைகளை உண்மையாகப் பரப்புவதும், பகுத்தறிவுக்கு எதிரான சிந்தனைகளை வளர்ப்பதும் நடைபெறுகிறது.
அப்படியானால், நமது கிராம சபைகளைப் பற்றிய உண்மையான அறிவை மக்களிடம் கொண்டு செல்ல இந்தத் தொழில்நுட்பத்தை ஏன் பயன்படுத்தக் கூடாது?
ஒவ்வொரு கிராமத்திற்கும் அதன் வரவு–செலவு, அரசுத் திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட பணிகள், நிலுவையில் உள்ள பணிகள், கிராமத்தின் இயற்கை வளங்கள், நீர்நிலைகள், பல்லுயிர் வளம், அடுத்த ஆண்டு செய்ய வேண்டிய பணிகள் ஆகியவற்றை மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் பகிர முடியும்.
கிராம சபைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் தேவை

அறிவியல் தொழில்நுட்பம் மக்களை அறியாமையில் வைத்திருக்க அல்ல. மக்களை அறிவாற்றல் கொண்ட குடிமக்களாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் சில கிராம ஊராட்சிகள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன. சில ஊராட்சிகளில் நீர்நிலை பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. சில இடங்களில் தூய்மை இயக்கம் சிறப்பாக உள்ளது. சில ஊராட்சிகள் பல்லுயிர் பாதுகாப்பில் முன்னோடிகளாக இருக்கின்றன.
சில இடங்களில் பெண்களின் பங்கேற்பு வலுவாக உள்ளது. சில இடங்களில் கிராம மக்கள் தங்களுடைய ஊராட்சியின் நிர்வாகத்தில் தொடர்ந்து பங்கேற்கிறார்கள். இவை அனைத்தும் தனித்தனி வெற்றிக் கதைகளாக முடிந்து விடக்கூடாது.
ஒரு கிராமத்தின் நல்ல நடைமுறை மற்றொரு கிராமத்திற்குச் செல்ல வேண்டும். நாம் சுற்றுலாவுக்குச் செல்கிறோம். உல்லாசப் பயணங்களுக்குச் செல்கிறோம். அப்படியானால், ஆண்டுக்கு ஒருமுறை முன்மாதிரி கிராமங்களுக்குச் சென்று கற்றுக்கொள்ள முடியாதா?
சிறப்பாகச் செயல்படும் ஊராட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் மற்ற கிராமங்களுக்கு அழைத்து வந்து அவர்களின் அனுபவங்களைப் பகிர முடியாதா? முன்மாதிரி கிராமங்களுக்கிடையே ஒரு வலையமைப்பை உருவாக்க முடியாதா?
படித்தவர்கள், நடுத்தர வர்க்கம் பங்கேற்க வேண்டும்
ஒரு கிராமம் இன்னொரு கிராமத்திடம் கற்றுக் கொள்ள முடியும். ஒரு கிராமத்தின் வெற்றி மற்றொரு கிராமத்தின் தொடக்கமாக மாற முடியும்.
கிராம சபை என்பது ஏழை மக்களுக்கான கூட்டம் என்ற தவறான எண்ணமும் சில இடங்களில் உள்ளது. “அது நமக்கானது அல்ல” என்று படித்தவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் ஒதுங்கி நிற்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
கிராமத்தில் வசிக்கும் ஒரு மருத்துவர், ஆசிரியர், பேராசிரியர், பொறியாளர், வழக்கறிஞர், தொழிலதிபர், ஓய்வுபெற்ற அரசு ஊழியர், இளைஞர், மாணவர் என ஒவ்வொருவருக்கும் கிராம சபையில் ஒரு பங்கு இருக்கிறது.
அவர்கள் எல்லோரும் பதவி வகிக்க வேண்டியதில்லை. ஆனால் அறிவைப் பகிரலாம். கணக்குகளைப் புரிந்து கொள்ள உதவலாம். திட்டங்களைப் பற்றி தகவல் அளிக்கலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவலாம். மாணவர்களை இணைக்கலாம். கிராமத்தின் எதிர்காலத் திட்டங்களை உருவாக்க உதவலாம்.
ஒரு சிறிய ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியைக் கூட சிறிய பொறுப்பாகப் பார்க்கக் கூடாது. மக்களோடு நேரடியாக இணைந்து செயல்படுவதற்கான மிக முக்கியமான ஜனநாயகப் பொறுப்பு அது. நல்ல மனிதர்கள் உள்ளாட்சியில் பங்கேற்கத் தயங்கும் ஒவ்வொரு முறையும், அந்த இடத்தை வேறு சக்திகள் நிரப்புவதற்கான வாய்ப்பு உருவாகிறது.
கிராம சபை ஓர் ஜனநாயக பள்ளிக் கூடம்
கிராம சபை என்பது தீர்மானங்களை நிறைவேற்றும் இடமாக மட்டும் இருக்கக் கூடாது. அது ஜனநாயகத்தைக் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடமாக இருக்க வேண்டும். அங்கு மக்கள் கேள்வி கேட்க வேண்டும். பதில் கேட்க வேண்டும். கணக்கைப் பார்க்க வேண்டும். விவாதிக்க வேண்டும். மாற்றுக் கருத்தைக் கேட்க வேண்டும். தீர்மானம் எடுக்க வேண்டும். தங்கள் தீர்மானம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவை அனைத்தும் ஜனநாயகப் பயிற்சிகள். அதனால்தான் கிராம சபை ஒரு சாதாரண நிர்வாகக் கூட்டம் அல்ல. கிராம சபை நடைபெறும் நாள் விடுமுறை நாளாக இருப்பதால் அதை ஓய்வுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டாம். குடும்பத்தோடு செல்லலாம். நண்பர்களோடு செல்லலாம். இளைஞர்களை அழைத்துச் செல்லலாம். மாணவர்களுடன் செல்லலாம்.
கிராமத்தின் வரவு–செலவை அறிந்து கொள்ளலாம். நடைபெற்ற பணிகளைப் பற்றி கேட்கலாம். நடைபெற வேண்டிய பணிகளைப் பற்றி விவாதிக்கலாம். குடிநீர், சாலை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, நீர்நிலைகள், மரங்கள், பல்லுயிர், கழிவு மேலாண்மை போன்ற பிரச்சினைகளை முன்வைக்கலாம். ஒரு நல்ல தீர்மானத்தை முன்மொழியலாம். அதன் செயல்பாட்டை அடுத்த கிராம சபையில் கேட்கலாம்.
இதுதான் ஜனநாயகத்தின் உயிரோட்டம்
பல ஆண்டுகளாக உள்ளாட்சி ஜனநாயகத்தின் வலிமை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், காலதாமதம் நீடித்துக்கொண்டே போனால் அது மக்களிடையே சலிப்பையும் விரக்தியையும் உருவாக்கும்.
எனவே, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான தேர்தல்கள், மக்கள் பிரதிநிதித்துவம், கிராம சபைகளின் தொடர்ச்சியான செயல்பாடு, அவற்றின் அதிகாரம் ஆகியவை அனைத்தும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் இணைய வேண்டும்

மாநில அரசு வழிகாட்டலாம். நிதி ஒதுக்கலாம். தொழில்நுட்ப உதவி வழங்கலாம். ஆனால், கிராம மக்களின் குரலே கிராமத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை சக்தியாக இருக்க வேண்டும்.
கிராமம் என்பது வெறும் புவியியல் எல்லை அல்ல. அது மனிதர்களின் வாழ்க்கை. அவர்களின் உழைப்பு. அவர்களின் இயற்கை வளம். அவர்களின் எதிர்காலம்.
அந்த எதிர்காலத்தைப் பற்றி பேசுவதற்கான ஜனநாயக இடம்தான் கிராம சபை.
எனவே, கிராம சபையைப் பற்றி ஒவ்வொரு கிராம மக்களும் கற்றுக்கொள்ள வேண்டும். கற்று, கிராம சபைக்குச் செல்ல வேண்டும். சென்று, கேள்வி கேட்க வேண்டும். கேட்டு, விவாதிக்க வேண்டும். விவாதித்து, தீர்மானிக்க வேண்டும். தீர்மானித்து, அதன் செயல்பாட்டைக் கண்காணிக்க வேண்டும். அதுவே உண்மையான உள்ளாட்சி ஜனநாயகம்.
நாம் எங்கெங்கோ சென்று கற்றுக்கொள்கிறோம். இனி நமது கிராமத்திலிருந்தே கற்றுக்கொள்வோம். முன்மாதிரி கிராமங்களைத் தேடிச் செல்வோம். முன்மாதிரிகளை நமது கிராமத்தில் உருவாக்குவோம்.கிராம சபையை ஒரு கூட்டமாக அல்ல, ஒரு ஜனநாயகப் பள்ளிக்கூடமாக மாற்றுவோம். நாளைய கிராம சபையில் இருந்து அந்தப் பயணம் தொடங்கட்டும்.
கட்டுரையாளர்

