அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளது. governor ravi reply to supreme court
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பு ஏற்றது முதல் அவருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ச்சியாக மோதல் நீடித்து வருகிறது. அரசுக்கு எதிராக நேரடியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அத்துடன், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்ததற்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பி இருந்தது. வழக்கு விசாரணை பிப்ரவரி 10ம் தேதி முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில் தமிழக அரசு ஏற்கனவே எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் ஆளுநர் தரப்பில் நேற்று எழுத்துப்பூர்வ வாதம் சமர்பிக்கப்பட்டது. அதில், “அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் (pocket veto) இருக்கிறது. பிரிவு 200-ல் குறிப்பிடப்பட்டுள்ள Discretion என்ற வார்த்தை ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தை குறிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஒவ்வொரு முறையும் அமைச்சரவை ஆலோசனை படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதத்தில் குறிப்பிட்ட ஆளுநர் தரப்பு, “ஒரு மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால் அந்த மசோதா செயலிழந்து விட்டது என்றே அர்த்தம். ஆகவே, காலாவதியான மசோதாவை மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பும் பொழுது அதன் மீது ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று அழுத்தமாக தெரிவித்துள்ளது.
மேலும், அவ்வாறு மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்குவது, குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்பது, ஒப்புதலை நிறுத்தி வைப்பது உள்பட 4 அதிகாரங்கள் விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளன என்றும் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், “தேவைப்பட்டால், அரசியல் சாசன பிரிவு 200-ஐ மேலும் செம்மைப்படுத்த, ஆளுநர்கள் அதிகாரம் தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன பிரிவிற்கு மாற்றம் செய்து விசாரிக்கலாம்” என்றும் ஆளுநர் தரப்பு எழுத்துப் பூர்வ வாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.