துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ள நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Governor Ravi invites vice chancellor
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தும், இனி துணை வேந்தர்களை அரசே நியமிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து ஏப்ரல் 17-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில், துணை வேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில், உதகையில் மார்ச் 25, 26, 27 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர் ரவி. இந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.
இந்தநிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் ரவி துணை வேந்தர்கள் கூட்டத்தை கூட்டியிருப்பதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் ரவிக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை அழைக்கவோ, கலந்தாலோசிக்கவோ உத்தரவுகள் பிறப்பிக்கவோ எந்த அதிகாரமும் இல்லை என்பதுதான் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரண்டுமுறை நிறைவேற்றப்பட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி தற்போது அமலுக்கு வந்துள்ள சட்டங்களின்படியும், அரசமைப்புச் சட்டப்படியும் உள்ள தற்போதைய நிலை ஆகும்.
இந்நிலையில் ஏப்ரல் 25, 26, 27 ஆகிய நாள்களில் ஊட்டியில் உள்ள ஆளுநரின் கோடை மாளிகைக்குத் துணைவேந்தர்கள் கூட்டம் என்ற பெயரில், அனைத்துத் துணைவேந்தர்களையும் பங்கேற்குமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக குடியரசுத் துணைத் தலைவர் நடந்துகொள்ளலாமா?
இது உண்மையாக இருந்தால், ஆளுநரின் இந்தச் செயல் அப்பட்டமான அரசியல் சட்டமீறல், ஆளுநர் நடத்தும் ‘போட்டி அரசாங்கம்’ (Parallel Government), உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை, ‘நீதிமன்ற அவமதிப்பு’ ஆகும். குடியரசுத் துணைத் தலைவரும் இதில் வந்து கலந்து கொள்வது எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போன்ற அடாவடி நடவடிக்கை. அரசியல் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையும் கூட.
எனவே, ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் ஆளுநர் அழைத்துள்ள கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்துகொள்ளக் கூடாது. ஆளுநர் அழைப்பைப் புறக்கணிக்க வேண்டியது துணைவேந்தர்களின் சட்டப்படியான கடமையாகும்.
இந்த ‘விபரீத விளையாட்டு’களின் மூலம் ஆளுநரோ, குடியரசுத் துணைத் தலைவரோ ஓர் அரசியல் நெருக்கடியை உச்சநீதிமன்றத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் உருவாக்கிடும் அரசியல் அடாவடித்தனமேயாகும் ‘‘வேலியே பயிரை மேயலாமா?’’
குடியரசுத் துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருக. தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசியல் விபரீத விளையாட்டைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தமிழ்நாடு மக்களின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்காக, குடியரசுத் துணைத் தலைவர் மீது மாநிலங்களவையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வரவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், “துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் விடுத்திருக்கும் அழைப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அத்துமீறலும் ஆகும். திட்டமிட்ட இந்த மோதல் போக்கிற்கு குடியரசு துணைத் தலைவரும் துணை போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஆர்.என்.ரவியின் இந்த சட்டவிரோத துணை வேந்தர்கள் மாநாட்டு அழைப்பினை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த மாநாட்டில் பல்கலை கழக துணை வேந்தர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்பதுடன், துணை வேந்தர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்கும்படி முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், “ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை தடுக்க வேண்டிய குடியரசுத் துணைத் தலைவர், அவருடன் இணைந்து செயலாற்றுவது அரசியலமைப்பு சட்ட நெருக்கடியை உருவாக்கும் அரசியல் சதியா? என ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் கால் ஊன்ற வேண்டும் என்ற நாக்பூர் குரு பீடத்தின் சேவகர்களாக செயல்படும் ஆளுநர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்கும் துணை வேந்தர்கள் மாநாட்டை பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும். ஆர்.என்.ரவியின் தொடரும் அதிகார அத்துமீறல்களை தடுத்து நிறுத்த, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு நேரடி நடவடிக்கையில் ஈடுபட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார். Governor Ravi invites vice chancellor
