இந்தியாவில் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
இது தொடர்பாக டெஸ்லா அமெரிக்க அதிகாரிகளும் டெஸ்லா இந்திய அதிகாரிகளும் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது அரசு வழங்கும் சலுகைகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. மேலும், 5,00,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆண்டுத் திறனுடன் (annual capacity) கார் தொழிற்சாலையை அமைப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 21 ஆம் தேதி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த போது அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்தார். அந்த வகையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் உடனான சந்திப்பு முக்கியமானதாக கருதப்பட்ட சூழலில் இந்தியாவில் தடம் பதிக்க இருக்கிறது டெஸ்லா நிறுவனம்.
தற்போதைய சூழலில் இந்தியாவை பொறுத்தவரை மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தான் டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
முன்னதாக இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின் எலான் மஸ்க்,” நான் மோடியின் ரசிகன். இந்தியா மீது மோடி மிகவும் அக்கறை காட்டுகிறார். ஏனென்றால் இந்தியாவில் முதலீடு செய்யும்படி மோடி எங்களை வலியுறுத்துகிறார். இந்திய சந்தைக்குள் டெஸ்லா கார்கள் கூடிய விரைவில் நுழையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி.
இதற்கு உண்டான அறிவிப்பை நாங்கள் விரைவில் வெளியிடுவோம் என நம்புகிறேன். நான் அடுத்த ஆண்டு இந்தியா செல்லத் திட்டமிட்டுள்ளேன். பிற பெரிய நாடுகளை விட இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்