ஜெம் வீரமணி விவகாரம் : திமுக, தவெகவை விளாசிய பெ.சண்முகம்

Published On:

| By Kavi

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில், முந்தைய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தவெகவினர் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோன்று இடைத்தேர்தலுக்காக இந்த விவகாரத்தை தவெக பயன்படுத்துகிறது என்று திமுகவினர் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

இவ்விவகாரம் தொடர்பாக இன்று (செப்டம்பர் 25) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், ”பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்கப்பட வேண்டும். குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பதும் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்த விசாரணையை முடித்து அனைவருக்கும் தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வற்புறுத்த விரும்புகிறேன்.

ADVERTISEMENT

ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி போக்சோ நீதிமன்ற நீதிபதி, குளோஷர் ரிப்போர்ட்டை நான் ஏற்க மாட்டேன், மீண்டும் விசாரணை செய்யுங்கள் என்று அவர் உத்தரவிட்டதின் அடிப்படையில் தான் இது பூதாகரமாக கிளம்பி இருக்கிறதே தவிர, இடைத்தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 

இவ்வளவு நாளும் மூடி மறைத்ததற்கு திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இதில் ‘யாரையும் காப்பாற்றுவதற்கு நாங்கள் தலையிடவில்லை, எந்த உத்தரவையும் நாங்கள் வெளியிடவில்லை’ என்று கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்தில் உத்தரவிடப்பட்டதா இல்லையா என்பது அல்ல பிரச்சனை. 

ADVERTISEMENT

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் புகார் அளிக்கப்படுகிறது. முறையாக எஃப்ஐஆர் என்பது பதிவு செய்யப்படுகிறது. எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதற்குப் பிறகு ஏன் மேல் விசாரணை நடத்தப்படவில்லை? வீடியோ என்பது தெளிவாக இல்லை என்கிற ஒற்றைக் காரணத்தைச் சொல்லி இவ்வளவு பெரிய வழக்கை முடித்து வைக்க முடியுமா என்கிற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன். 

அப்படியென்றால் அதற்கான அரசியல் அழுத்தத்தைக் கொடுத்தது யார்? அதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் யார் என்பதற்கு அவருடைய அறிக்கையில் எந்தவிதமான பதிலும் இல்லை. ‘குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், இதுதான் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய நிலை’ என்று இப்போது தெரிவிக்கிறார் மு.க.ஸ்டாலின். 

ஆட்சியில் இருந்த காலத்தில் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதமே இந்த புகார் எழுத்துப் பூர்வமாகக் கொடுக்கப்பட்டு, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் இப்போது பேட்டி கொடுத்திருக்கிறார். 25ஆம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டு, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணையே நடத்தப்படாமல் ஆதாரங்கள் இல்லை, ஆவணங்கள் இல்லை, தெளிவாக இல்லை என்கிற பெயரில் இந்த வழக்கை முடிப்பதற்கு திமுக ஆட்சி காலத்தில் முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. 

ஆகவே, மு.க.ஸ்டாலின் இதை அவ்வளவு சுலபமாக இன்றைக்கு அறிக்கை விட்டிருப்பதைப் போல கடந்து சென்றுவிட முடியாது. தன்னுடைய ஆட்சி காலத்தில் பெரிய வலைப்பின்னலைப் போல ஒரு பாலியல் குற்றம் நிகழ்ந்திருக்கிற போது, அதற்கான தார்மீகப் பொறுப்பை… ‘என்னுடைய ஆட்சி காலத்தில் உரிய முறையில் விசாரணை நடத்தாததற்கு நான் பொறுப்பேற்கிறேன், அதற்கு காரணமான அதிகாரிகள், அல்லது உரிய முறையில் என்னுடைய கவனத்திற்கு இந்தப் பிரச்சனை கொண்டு வரப்படவில்லை’ என்ற முறையில் தான் அவர் பதில் சொல்வது நேர்மையாக இருக்குமே தவிர, இதில் எங்களுக்கு எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்று கடந்து போவதனால் இந்தப் பிரச்சனையை மூடி மறைத்துவிட முடியாது. 

ஆகவே, அதிமுக ஆட்சி, திமுக ஆட்சி… அந்தந்த காலகட்டத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள், இவர்கள் அனைவருக்கும் இதிலே ஒரு கூட்டுச் சதி செய்து குற்றத்தை மூடி மறைப்பதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். பல கோடிக்கணக்கான ரூபாய்கள் இதிலே கைமாற்றப்பட்டிருக்கிறது.

குற்றத்தை மூடி மறைப்பதற்கும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் பல கோடிக்கணக்கான ரூபாய்களை ஜெம் கிரானைட் வீரமணி வாரி இறைத்திருக்கிறார் என்கிற செய்திகள் எல்லாம் வருவதை ஒட்டித்தான், இது வழக்கமான காவல்துறை மூலமாக விசாரணை நடத்தப்படுவது என்பது முழுமையான உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு உதவி செய்யாது. 

ஆகவே தான், எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வு குழு) அமைக்கப்பட வேண்டும். அதுவும் உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் அந்த விசாரணை என்பது நடத்தப்பட வேண்டும். ஒரு கால வரைமுறையோடு விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார். 

ஆளுங்கட்சி அமைச்சர்கள், நாங்கள் தான் இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறோம் என்று சொல்கிறார்கள். அதேசமயம், இடைத்தேர்தல் பிரச்சார யுக்தியாக பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது என்ற கேள்விக்கு, 

”நீதிபதி தான் இதுக்கு முக்கியமான காரணம். போக்சோ சிறப்பு நீதிமன்றத்தினுடைய நீதிபதி தான் இதற்கு காரணம்… மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு கொண்டுவரப்பட்டதற்கும், இவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு அரசாங்கம் உள்ளானதற்கும் நீதிபதியின் உத்தரவு தான் காரணமே தவிர, அரசு காரணம் அல்ல. ஏனென்றால் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி ஏன் குளோசர் ரிப்போர்ட் தாக்கல் செய்கிறார்கள். 

இவர்கள் வழக்கை முடிப்பதற்குத்தான் அறிக்கையை நீதிமன்றத்திலே சமர்ப்பிக்கிறார்கள். ஒருவேளை அதை நீதிபதி ஏற்றுக் கொண்டிருந்தால் என்ன கதியாயிருக்கும் இந்தக் குழந்தைகளுடைய நிலைமை? இந்த வழக்கினுடைய கதி என்ன ஆயிருக்கும்? ஆகவே அவர்கள் சொல்வதை நான் ஏற்கவில்லை” என்றார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share