‘புதிய கீதை’ முதல் ‘ஜனநாயகன்’ வரை.. காலந்தோறும் விஜய் பட ‘சர்ச்சைகள்’!

Published On:

| By Mathi

Vijay Films

விஜய் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் பெரும் சர்ச்சைகள் வெடிப்பது ‘ஜனநாயகன்’ வரை தொடருகிறது. ஜனவரி 9-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைக் குழு சான்றிதழ் பிரச்சனையால் நீதிமன்ற படிகளேறி இருக்கிறது; ஜனவரி 9-ந் தேதி ரிலீஸ் செய்வதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விஜய் படங்களும் சர்ச்சைகளும்

ADVERTISEMENT

புதிய கீதை (2003): இயக்குநர் ஜெகன் இயக்கத்தில் விஜய் நடித்த கீதை படத்தின் தலைப்பு சர்ச்சையானது. இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பால் அந்த படம் ‘புதிய கீதை’ என்றாக மாற்றப்பட்டது.

காவலன் (2011): மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பாடிகார்டு’ படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான ‘காவலன்’, வெளியாவதற்கு முன்னரே பல சிக்கல்களைச் சந்தித்தது. விஜய்யின் முந்தைய படமான ‘சுறா’வின் தோல்வியால் ஏற்பட்ட நஷ்ட ஈடு கோரி, கோவை திரையரங்கு உரிமையாளர்கள் ‘காவலன்’ படத்தைத் திரையிட மறுத்தனர்.

ADVERTISEMENT

துப்பாக்கி (2012): ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘துப்பாக்கி’ படத்திற்கு, தலைப்பு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. ‘கள்ளத்துப்பாக்கி’ என்ற படக்குழுவினர், தங்கள் தலைப்பை விஜய் படத்திற்காகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறினர். இது ஒருபுறம் இருக்க, இஸ்லாமியர்களைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி பல்வேறு அமைப்புகள் படத்திற்குத் தடை கோரி போராட்டம் நடத்தின. பலத்த எதிர்ப்புக்கிடையே, குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்பட்டு, சில வசனங்கள் மியூட் செய்யப்பட்ட பின்னரே ‘துப்பாக்கி’ வெளியானது.

தலைவா (2013): ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான ‘தலைவா’ திரைப்படம், “டைம் டூ லீட்” (Time to Lead) என்ற டேக் லைனுடன் வெளியீட்டிற்குத் தயாரானபோது, விஜய்யின் அரசியல் விருப்பங்களை வெளிப்படுத்துவதாகக் கருதி அப்போதைய தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மர்மக் கடிதம் மூலம் திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என்று மிரட்டல் வந்ததாகக் கூறி, அப்போதைய தமிழக அரசு பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி படத்திற்குத் தடை விதித்தது. இது விஜய்யை அரசியல் ரீதியாக அதிகம் அலைக்கழித்த படமாக அமைந்தது. நீண்ட போராட்டங்களுக்குப் பின்னரே, தமிழகத்தில் சில நாட்கள் தாமதமாகப் படம் வெளியானது. அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்து விஜய் வெளியிட்ட வீடியோ இப்போதும் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

கத்தி (2014): ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படம், லைக்கா நிறுவனம் தயாரித்ததால் சர்ச்சையில் சிக்கியது. லைக்கா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆதரவு பெற்ற நிறுவனம் என்று செய்திகள் பரவின. தமிழ்த் தேசிய அமைப்புகள் படத்தைத் திரையிட கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தயாரிப்பு நிறுவனத்தால் மறுக்கப்பட்டது. அதே சமயம், இப்படத்தின் கதை தனது கதை என்று மீஞ்சூர் கோபி வழக்கு தொடர்ந்தார். பின்னர், சமரச பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கோபி வழக்கை வாபஸ் பெற்றார்.

மெர்சல் (2017): அட்லீ இயக்கத்தில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) திட்டம் குறித்த வசனங்களால் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை வெடித்தது. பாஜகவினர் இந்தப் படத்திற்கு எதிராகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்து, சில காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், படத்தில் விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்தச் சர்ச்சைகள் படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தன.

சர்கார் (2018): ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான ‘கோமளவல்லி’யை வில்லி கதாபாத்திரத்திற்குப் பயன்படுத்தியது மற்றும் அரசின் இலவசத் திட்டங்களை விமர்சித்தது போன்ற காரணங்களால் அதிமுகவினரிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும் விஜய் பேனர்கள் கிழிக்கப்பட்டு, போஸ்டர்கள் எரிக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தன. தமிழக அரசு அழுத்தத்தின் காரணமாக, சர்ச்சைக்குரிய காட்சிகள் மறுதணிக்கையில் நீக்கப்பட்ட பின்னரே படம் வெளியானது.

பீஸ்ட் (2022): நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம், இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதாகக் கூறி சர்ச்சையில் சிக்கியது. இதனால் சில அரபு நாடுகளில் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இந்தப் படம் திரையிடப்படவில்லை.

லியோ (2023): லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’ படமும் வெளியீட்டிற்கு முன்னும் பின்னும் பல சர்ச்சைகளை எதிர்கொண்டது. படத்தில் பல வெட்டுக்களும், சில வசனங்கள் மியூட் செய்யப்பட்டதும் தணிக்கைத் துறையின் கடுமையான நடவடிக்கைகளைக் காட்டின.

‘ஜனநாயகன்’: தமிழக வெற்றிக் கழகத்தை நடத்தி வரும் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் இது. ஜனவரி 9-ந் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழு உறுப்பினரே புகார் கொடுக்க நீதிமன்றத்தில் இப்பட வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதனால் ஜனநாயகன் படம் ஜனவரி 9-ந் தேதி வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share