கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மூன்று முறை எம்.எல்.ஏவாக செயல்பட்டவர் விஜயதாரணி.
கடந்த 2024 பிப்ரவரி மாதம் எம்எல்ஏ பதவி முடியும் முன்பே பாஜகவில் இணைந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட விஜயதாரணி தோல்வியடைந்தார்.
இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் வெற்றி பெற்றார்.
இந்த சூழலில் விஜயதாரணி இன்று (ஜூன் 13) முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
தேர்தல் சமயத்தில் பாஜக நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என விஜயதாரணி அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜயதாரணி அமைச்சர்கள் என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் அக்காட்சியில் இணைந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி, ”இரண்டரை ஆண்டுகாலம் பாஜகவில் இருந்தும் மக்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலை இருந்தது.
அந்த விதத்தில், த.வெ.க-வில் இன்றைக்கு தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கி, ஊழலற்ற ஆட்சியை வழங்கவும், போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும், பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்கவும் சூளுரைத்து, நம்முடைய முதலமைச்சர் விஜய் இன்றைக்குத் தமிழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
மக்கள் பணியாற்றுவதற்கு நிச்சயமாக இங்கு களம் இருந்து கொண்டிருக்கிறது.
மக்களுக்காக உழைக்கும் இடத்தில் தொடர்ந்து பணியாற்றிய நான், தொடர்ந்து மக்கள் பணியாற்ற, அந்த மனதோடு மக்களோடு நெருங்கி வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இன்றைக்கு தவெகவில் இணைந்திருக்கிறேன்.
அமைச்சர்கள் எல்லோரும் சாமானிய மக்களாக இன்றைக்கு எல்லோரையும் அரவணைத்து, ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து மக்கள் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
மக்கள் பணியாற்றுவதற்காகப் பாஜகவில் இணைந்தும், அதற்குண்டான வாய்ப்பு என்பது கிடைக்காமல், இரண்டரை ஆண்டுகாலம் மிகவும் நெருக்கடியில் இருந்து கொண்டிருந்த சூழ்நிலை உங்களுக்கெல்லாம் தெரியும்.
ஆனால், தற்போது த.வெ.க-வில் சாமானிய மக்களும் மக்கள் பணி ஆற்ற முடியும் என்பதைத் த.வெ.க நிரூபித்திருக்கிறது. எந்த விமர்சனம் வந்தாலும் அதைப்பற்றி நான் பொருட்படுத்தவில்லை.
மக்கள் பணியாற்றுவதற்கு ஒரு தளம் என்பது அவசியம். அது சரியான தளமாக இருக்க வேண்டும்; அது ஊழலற்ற தளமாக இருக்க வேண்டும்; பெண்களுக்கு வாய்ப்பு தரக்கூடிய, பாதுகாப்பு தரக்கூடிய ஒரு தளமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தளமாகத் தான் தமிழக வெற்றிக் கழகத்தை நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.
