ரூ.17 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். Former AIADMK minister son arrested
அதிமுக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளார். ராஜா மீது அவரது அக்காவே போலீசில் மோசடி புகார் கொடுத்துள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் அவர் அளித்த புகாரில், ”ராஜாவின் Omeena Pharma Distributors Pvt. Ltd., நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16 % பங்குகள் தருவதாக கூறினார். இதை நம்பி ஸ்ரீபெரும்புதூர் அருகே எனது கணவர் பெயரில் இருந்த நிலத்தை அடமானம் வைத்து பணம் பெற்று கொடுத்தோம். அந்த பணத்தை எங்களுக்கு தெரியாமலேயே அவரது மற்றொரு நிறுவனமான Ashun Exim என்ற நிறுவனத்துக்கு மாற்றிக்கொண்டார்.
அதோடு, Golden Blue Metals Pvt. Ltd., என்ற பெயரில் கல்குவாரி தொடங்குவதாக கூறினார். அதில் முதலீடு செய்தால் அதிக பங்குகள் தருவதாக ஆசை காட்டினார். இதற்காக தன்னிடம் இருந்த 300 சவரன் நகையை பெற்று அடமானம் வைத்தார்.
அந்த பணத்தை வைத்து 40 ஏக்கர் இடம் வாங்கினார். இப்படியாக அவரும் அவரது மனைவியும் 17 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரை தொடர்ந்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் ராஜா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
ராஜா, எந்த நேரத்திலும் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல நேரிடும் என அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், கடந்த 10ஆம் தேதி சென்னையில் இருந்து மலேசியாவுக்குச் செல்ல ராஜா, சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது அங்கு மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் காயத்திரி தலைமையிலான போலீசார் ராஜாவை கைது செய்தனர். அவரை எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு நீதிமன்ற நடுவர் முன்பாக ஆஜர்படுத்தினர்.
அவரிடம் போலீசார் விசாரித்து வரும் நிலையில், ராஜா மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. Former AIADMK minister son arrested