கும்பகோணத்தில் இன்று ஜனவரி 28-ந் தேதி நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-இன் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இம்மாநாட்டில் ஸ்டாலின் வெளியிட்ட 5 அறிவிப்புகள்:
- தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவுபெற்றுள்ள 1,537 உலமாக்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமும், 44 உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் ஆயிரத்தி 500 ரூபாயும் இப்போது வழங்கப்படுகிறது. இனி, 5 ஆயிரம் ரூபாயாக ஓய்வூதியமும், 2 ஆயிரத்தி 500 ரூபாயாகக் குடும்ப ஓய்வூதியமும், உயர்த்தி வழங்கப்படும்.
- உலமாக்கள் நலவாரியத்தில் 15 ஆயிரத்தி 60 உலமாக்கள் இருக்கிறார்கள். முதற்கட்டமாக இதில், ஆயிரம் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான அரசு மானியத் தொகை, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- ஏற்கனவே சென்னை மற்றும் மதுரையில் வக்பு தீர்ப்பாயம் செயல்பட்டு வரும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக ஒரு வக்பு தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
- கல்லறைத் தோட்டம் மற்றும் கபரிஸ்தான்கள் இல்லாத இடங்களில் மாநகராட்சிகளால் அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டு, அவை அமைக்கப்படும்.
- அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கும் 10 உருதுமொழி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், “தமிழ்நாட்டின் வரலாற்றை புரட்டிப் போட்ட 1967 தேர்தலில் பேரறிஞர் அண்ணாவுக்கு தோள் கொடுத்து நின்றவர் கண்ணியமிகு காயிதே மில்லத். தலைவர் கலைஞரின் வாழ்வில் அசன் அப்துல் காதர், கருணை ஜமால், கவிஞர் காமு ஷெரீப், இசைமுரசு நாகூர் ஹனிபா போன்றவர்கள் உற்றத் தோழர்களாக உறுதுணையாக இருந்தனர். தலைவர் கலைஞர் அவர்கள் இஸ்லாமியர்கள் வேறு; தான் வேறு என்று ஒருபோதும் நினைத்தது கிடையாது.
தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் காக்கப்பட, சிறுபான்மையினர் தொடர்ந்து சம உரிமையுடன் வாழ 2026 தேர்தலில் NDA வீழ்த்தப்பட வேண்டும்
CAA, முத்தலாக் தடைச் சட்டம், Waqf Amendment Bill, SIR எனச் சிறுபான்மையினருக்கு எதிரான துரோகப் பட்டியல் நிறைந்ததுதான் NDA கூட்டணி.
ஒன்றிய அரசின் சதித் திட்டங்களைத் தமிழ்நாட்டில் நிறைவேற்ற மாட்டோம் எனத் துணிச்சலாக அறிவித்து, சிறுபான்மையினர் நலத்திட்டங்களின் பட்டியல் நிறைந்தது Dravidian Model அரசு.
பா.ஜ.க.வின் பிரிவினைவாத வன்முறை அரசியலுக்குத் துணைபோகும் அ.தி.மு.க.வை வரும் தேர்தலில் துடைத்தெறிய வேண்டும். எனதருமை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தோழர்கள் இதற்காக உறுதியேற்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
