உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சென்னை மெரினா லூப் கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் மீனவர்கள் இன்று (ஏப்ரல் 12) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள லூப் கடற்கரை சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மீன்கடைகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.
நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,
லூப் கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றியது குறித்த அறிக்கையை ஏப்ரல் 18-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் இன்று காலை சென்னை மெரினா லூப் கடற்கரை சாலையில் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் நண்டுகள் மற்றும் மீன்களை கொட்டி மீனவர்கள் போராட்டம் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செல்வம்
