பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவரான அதானியை காப்பாற்றுவதற்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் நிதி அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
அதானி குழுமம் பங்குச்சந்தை நிதி மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தன.
அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியான பிறகும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி அதானி குழுமத்தின் பங்குகளை தொடர்ந்து வாங்கி வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் எல்ஐசியின் பங்குகள் பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகும் இது குறையாமல் அதிகரித்து வருகிறது.
ஜூன் 2021-அம் ஆண்டின் இறுதியில், அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான அதானி எண்டர்பிரைசஸில் 1.32 சதவீத பங்குகளை எல்ஐசி கொண்டிருந்தது. 18 மாத இடைவெளியில், டிசம்பர் 2022-ஆம் ஆண்டு இறுதிக்குள், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் எல்ஐசியின் பங்கு 4.23 சதவீதத்தை எட்டியது.
மார்ச் 2023 இறுதிக்குள் அதானி குழுமத்தில் எல் ஐ சி-யின் பங்குகள் 4.26 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 60 சதவீதம் சரிந்த நேரத்தில் இந்த உயர்வு ஏற்பட்டது.
ஜனவரி-மார்ச் 2023 காலாண்டில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 3.75 லட்சம் பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளது.
பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவரான அதானியை காப்பாற்றுவதற்காக எல்ஐசி நிதி பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “2023-ஆம் ஆண்டு ஜனவரி – மார்ச் காலகட்டத்தில் அதானி குழுமத்தின் ரூ.3.75 லட்சம் பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக கோடிக்கணக்கான இந்தியர்கள் எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் மக்களின் பணத்தை பிரதமர் மோடி ஏன் அதானியின் நலனுக்காக செலவிடுகிறார். இதற்கான பதில், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நிச்சயமாக தேவை என்பது தான்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஜனநாயகம் பற்றி பாஜகவிற்கு பாடம் எடுப்பதா? – கிரண் ரிஜிஜூ
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கலாஷேத்ரா மீது நடவடிக்கை : மனித உரிமை ஆணையம் பரிந்துரை!