ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கொச்சி வரை பயணிக்க இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
ஓமன் தலைநகர் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து, இன்று (செப்டம்பர் 14) கேரளா கொச்சினுக்கு வருவதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX-442, VT-AXZ) பயணிகளோடு புறப்படுவதற்குத் தயாராக இருந்தது.
எதிர்பாராத விதமாக விமானத்தின் இடது பக்கமாக இருந்த என்ஜின்.2 பழுது காரணமாக ஏற்பட்ட தீயால் புகை பரவ தொடங்கியுள்ளது. 141 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் விமானத்தின் உள்ளே இருந்துள்ளார்கள்.
நல்வாய்ப்பாக விமானம் புறப்படுவதற்கு முன்பாக விபத்து ஏற்பட்டதால் அனைவரும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மஸ்கட்டிலிருந்து கொச்சிக்குப் பயணிகளை அழைத்து வருவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமான போக்குவரத்துறை ஒழுங்குமுறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
விமான நிறுவனத்தின் பொறியியல் குழு விபத்து ஏற்பட்ட விமானத்தை ஆய்வு செய்து விமான போக்குவரத்துத்துறை ஒழுங்குமுறை இயக்குநரகத்திடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா