வேலைக்காரன் முதல் மாரீசன் வரை.. தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஃபஹத் பாசில்

Published On:

| By Mathi

Fahadh Faasil.. From Velaikkaran to Maareesan

ஃபஹத் பாசில்.. தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்கள் கொண்டாடும் கலைஞன்.. இன்று 43 வயது..

பூவே பூச்சூடவா (1985), பூவிழி வாசலிலே (1987), என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988), வருசம் 16 (1989), அரங்கேற்ற வேளை (1990), கற்பூர முல்லை (1991), கிளிப்பேச்சு கேட்கவா (1993), காதலுக்கு மரியாதை (1997), கண்ணுக்குள் நிலவு (2000), ஒரு நாள் ஒரு கனவு (2005) என தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வரவேற்ற திரைப்படங்களின் இயக்குநர் பாசில் மகன்தான் ஃபஹத் பாசில்.

ADVERTISEMENT

2002-ம் ஆண்டு ஃபஹத் பாசில் தனது 20-வது வயதில், தனது தந்தை பாசில் இயக்கத்தில் வெளியான கையெத்தும் தூரத்து – Kaiyethum Doorathu என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரை உலகில் நடிகராக அறிமுகமானார். ‘தொண்டிமுத்தலும் தசாசாட்சியும்’ Thondimuthalum Driksakshiyum என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார் ஃபஹத்.

தமிழில் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து 2017-ல் வெளியான வேலைக்காரன் திரைப்படம் மூலம் அறிமுகமானார் ஃபஹத்.

ADVERTISEMENT

கார்ப்பரேட் உலகில் நிலவும் முறைகேடுகளையும், நுகர்வோர் சந்தையின் வணிக சூழ்ச்சிகளையும் மையமாகக் கொண்ட படம். இதில் ஆதி என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக பஹத் பாசில் நடித்திருப்பார்.

ஹீரோவுக்கு இணையான எதிர்மறையான மற்றும் சாதுரியமான கதாபாத்திரத்தில் தனது நடிப்பின் மூலம் மிரட்டியிருப்பார் ஃபஹத்.

ADVERTISEMENT

இதற்கு அடுத்ததாக 2019-ல் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் முகில் என்கிற கதாபாத்திரம்.. வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களையும், மனித மனங்களின் பலவீனங்களையும் பேசும் ஆழமான படம். எளிய நடுத்தரக் குடும்பத் தலைவனாக நடித்திருப்பார்.

தனது வீட்டின் ஹாலில் திடீரென நடக்கும் ஒரு அசாதாரணமான மற்றும் அதிர்ச்சிகரமான சூழலில், ஒரு சாதாரண மனிதன் எப்படிப் பயந்து நடுங்குவான், எப்படித் தவிப்பான் என்பதைத் தனது உடல்மொழி மற்றும் முக பாவனைகள் மூலமாக மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியிருப்பார். யதார்த்தமான நடிப்பிற்குச் சிறந்த உதாரணம் இக்கதாபாத்திரம்.

2022-ல் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படம்.. போதைப்பொருள் கடத்தல் கும்பலை வேட்டையாடும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரியாக அமர் என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார்.

உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தப் படம் ஃபஹத் பாசிலுக்குத் தமிழ் சினிமாவில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதிகம் பேசாமல், முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல், கண்களாலும் துப்பாக்கி தூக்கும் வேகத்தாலும் மட்டுமே மிரள வைக்கும் ஒரு அதிரடி அதிகாரியாகத் திரையை முழுமையாக ஆக்கிரமித்திருப்பார்.

2023-ல் வெளியான மாமன்னன் திரைப்படம், தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஃபஹத் பாசிலை கொண்டு சேர்த்தது. மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக, குணசித்திர பாத்திரத்தில் வடிவேல் நடிக்க ரத்தினவேல் என்ற கேரக்டரில் பின்னி பெடல் எடுத்திருப்பார் ஃபஹத் பாசில்.

சாதிய வன்மம், அரசியல் ஆதிக்கம் மற்றும் தந்தை-மகன் இடையேயான அதிகார மோதலைப் பேசும் இந்த படத்தில் சக்திவாய்ந்த ‘சாதிய’ அரசியல்வாதியாக அசத்தி இருப்பார்.

2024-ல் ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்தில் பேட்டரி.. பேட்டரிக் என்ற தொழில்நுட்ப வல்லுநர் பாத்திரம். ரசிகர்களுக்குத் தேவையான கலகலப்பைக் கொடுக்கும் துறுதுறுப்பான நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனமான குணச்சித்திர வேடம்.

மீண்டும் நடிகர் வடிவேலுடன் 2025-ல் மாரீசன் திரைப்படம்.. இதில் தயாளன் பாத்திரம். உணர்வுபூர்வமான பயணமும் மனித உளவியலும் நிறைந்த கதைக்களம் கொண்ட படம். மனித உணர்வுகளின் சிக்கல்களை வெளிப்படுத்தும் ஒரு யதார்த்தமான மற்றும் அமைதியான கதாபாத்திரத்தில் தனது மௌனமான நடிப்பின் மூலமும் தனித்துவமான உடல்மொழி மூலமாகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்.

ஃபஹத் பாசிலுக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துகள்!

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share