ஏக்நாத் ஷிண்டேவை விட, பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராவதில் அஜித் பவார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆர்வம் காட்டி வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 145 தொகுதிகள் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியும். இந்த நிலையில் நடந்து முடிந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அதில் பாஜக மட்டும் 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கூட்டணியில் போட்டியிட்ட ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வென்றுள்ளது.
இதற்கிடையே அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் மகாயுதி கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.
அங்கு முதலமைச்சராக உள்ள ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என சிவசேனா தலைவர்கள் வாதிட்டு வருகின்றனர்.
அவர்கள், ”இந்த வெற்றி பாஜக மற்றும் என்சிபியால் மட்டும் அல்ல. இது மஹாயுதியின் குழுப்பணியின் விளைவாகும். எனினும் தேர்தலில் கேப்டன் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தான் மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்தது. மகாயுதியின் வெற்றியில் அவரது பங்களிப்பை புறக்கணிக்க முடியாது. ஷிண்டேவை முதல்வராக்காவிட்டால், அது பாஜகவின் சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு தவறான செய்தியை அனுப்புவதாக இருக்கும்” என அவரது கட்சியினர் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில், பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டு முதல்வராக நியமிக்கப்பட்டால் அவருக்கு என்சிபி தனது ஆதரவை நீட்டும் என நம்பப்படுகிறது.
“முதல்வர் பதவி குறித்து பாஜக மேலிடம் முடிவெடுக்கும் என காத்திருக்கிறோம். அதன் பிறகு, எங்கள் கட்சியில் ஒரு முடிவு எடுக்கப்படும்” என்று பெயர் வெளியிட விரும்பாத என்சிபி மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “288 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலச் சட்டமன்றத்தில் பாஜக மட்டும் 132 இடங்களைப் பெற்றுள்ளது. எனவே, ஆட்சி அமைப்பதற்கு பாஜக தனது கூட்டணிக் கட்சிகளை அதிகம் சார்ந்திருக்க தேவையில்லை. ஃபட்னாவிஸ் முதலமைச்சராக வேண்டும் என்ற நம்பிக்கையுடன் மாநிலத் தேர்தல்களின் போது ஆர்.எஸ்.எஸ் கடுமையாக உழைத்தது” என்று கூறினார்.
மகாயுதி கூட்டணியில் இத்தனை களேபரங்கள் நடந்தாலும், பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்றக் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு, முதல்வர் பதவி குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா இறுதி முடிவு எடுப்பார் என்றும், எனினும் ஃபட்னாவிஸ் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பாஜக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விழுப்புரம்: அரசு விழாவில் முதல்வரோடு டாக்டர் ராமதாஸ், அன்புமணி? நடப்பது என்ன?
IPL Auction : சிஎஸ்கே தட்டித் தூக்கிய டாப் வீரர்கள் யார்? யார்?