ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டிக்கு மத்தியில் நட்சத்திர ஆல்ரவுண்டர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது அந்த அணியின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
அடுத்தாண்டு நடைபெறும் 18வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 10 ஐபிஎல் அணிகளும், 527 வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
விறுவிறுப்புடன் தொடங்கிய ஐபிஎல் ஏலத்தில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை அதிகபட்சமாக ரூ. 27 கோடிக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. இதுதவிர ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், அர்ஷ்தீப் ஷிங், முகமது சிராஜ் உள்ளிட்டோர் கடும் போட்டிக்கு மத்தியில் வாங்கப்பட்டனர்.
எனினும் முதல் சுற்றில் முன்னாள் சாம்பியன்களான சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட அணிகள் எந்தவித ஆர்வமும் காட்டாதது வியப்பை ஏற்படுத்தியது.
2022 ஏலத்தின்போது ராஜஸ்தான் அணிக்கு சென்ற ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவரை வாங்குவதில் கடும் போட்டி காணப்பட்ட நிலையில் ரூ. 9.75 கோடிக்கு சென்னை அணி விலைக்கு வாங்கியது. இதன்மூலம் 9 ஆண்டுகளுக்கு பின்னர் தாய் வீடான சென்னை அணிக்கு திரும்பியுள்ளார் அஷ்வின்.
இதேபோன்று சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலக்கிய நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை ரூ. 4 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.
ஏற்கனவே சென்னை அணியில் இருந்த தொடக்க ஆட்டக்காரரான டெவோன் கான்வே ரூ. 6.25 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமதுவை ரூ. 10 கோடிக்கு வாங்கிய சென்னை அணி, இந்திய வீரர்களான கலீல் அகமதுவை ரூ 4.80 கோடிக்கும், ராகுல் திரிபாதியை ரூ 3.40 கோடிக்கும், விஜய் சங்கரை ரூ 1.2 கோடிக்கும் வாங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”அதிமுகவை வழி நடத்துங்கள் என ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தவர் ஜானகி” : எடப்பாடி பழனிசாமி
தஞ்சை தமிழ் பல்கலை. துணைவேந்தர் சஸ்பெண்ட் : ஆளுநருக்கு திருமா கண்டனம்!