அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு இன்று (ஆகஸ்டு 23) காலை தொடங்கிய அறுவை சிகிச்சை 9 மணி நேரத்துக்குப் பின் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
ஆவடியை அடுத்த வீராபுரம், ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-செளபாக்யா தம்பதியின் மூத்த மகள் டானியா (9). இவர் முகச் சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் , ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 9 மணி நேர அறுவை சிகிச்சையில் 10 பேர் கொண்ட மருத்துவ வல்லுனர் குழு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர், அவரை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்தும் பாதிப்பு குறையவில்லை.
இதனையடுத்து பல மருத்துவமனையில் டானியா-வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல டானியாவின் முகம், வலது கண், கன்னம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதையத் தொடங்கியது.

இந்த விவகாரம் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனையடுத்து, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடந்து முடிந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 23) 10 பேர் கொண்ட மருத்துவ வல்லுனர் குழு டானியாவுக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இது குறித்து டானியாவின் தாய் செளபாக்யா ; “நான் எத்தனையோ கடவுளை வேண்டி இருக்கிறேன் எந்த கடவுளும் எதுவும் செய்யவில்லை எனக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அய்யா தான் கடவுள் என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
மேலும் எங்களை அமைச்சர்கள் அனைவரும் நன்றாக பார்த்து கொண்டனர் என்றும் என் குழந்தையின் குரலை ஸ்டாலின் அய்யா கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
“இந்த அறுவை சிகிச்சையினால் சிறுமியின் கன்னம் சீரடைந்து தன்னம்பிக்கை ஏற்பட்டு மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர வேண்டும்” என்று தழுதழுத்தார் சிறுமியின் தந்தை.
மு.வா.ஜெகதீஸ் குமார்
முகச் சிதைவு நோய் பாதித்த சிறுமி: 8 மணி நேர அறுவை சிகிச்சை தொடங்கியது!
