கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவி வகித்த எ.வ.வேலு, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் துறையில் எவ்வித ஒப்பந்தப் பணிகளையும் மேற்கொள்ளாமலேயே, ஒப்பந்ததாரர்களுக்குப் பல கோடி ரூபாய் முறையற்ற வகையில் வழங்கப்பட்டதாக ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 25-ஆம் தேதி அவருக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையைத் தொடர்ந்து, கடந்த 3-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு எ.வ.வேலுவிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அந்தச் சமயத்தில் அவர் மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றிருந்ததால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, எ.வ.வேலு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு இன்று ஆஜரானார். அவரிடம் முறைகேடு புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
