9, 10-ம் வகுப்புகளில் 3-வது மொழித் தேர்வு தேர்ச்சி: மொழித் திணிப்பு அல்லாமல் வேறு என்ன? – தமிழச்சி தங்கபாண்டியன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Thamizhachi

தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) என்ற பெயரில், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழிக்கான பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால்தான் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற முடியும் என்ற வகையில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ” மூன்றாவது மொழியை “விருப்பம்” என்ற பெயரில் அறிமுகப்படுத்திவிட்டு, பின்னர் அதனைத் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாய நிபந்தனையாக மாற்றுவது, மறைமுக மொழித் திணிப்பு அல்லாமல் வேறு என்ன? இதுபோன்ற நடவடிக்கைகள் தேசிய கல்விக் கொள்கையின் உண்மையான நோக்கம் கல்விச் சீர்திருத்தமா அல்லது மொழித் திணிப்பா என்ற நியாயமான கேள்வியை எழுப்புகின்றன.

ADVERTISEMENT

“இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்; இருமொழிக் கொள்கையை என்றும் காப்போம்” என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலைப்பாடு, தமிழ்நாட்டின் மொழி உரிமைக்கான அடித்தளமாகும். அந்தக் கொள்கையை ஆட்சியிலும், அரசியலிலும் உறுதியாகக் காத்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.

அதே பாதையில், தமிழ்நாட்டின் மொழி உரிமை, மாநில உரிமை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை பாதுகாக்கும் உறுதியுடன் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் – திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார். தி.மு.க-வின் நிலைப்பாடு தெளிவானது – இருமொழிக் கொள்கையில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை.

ADVERTISEMENT

கல்வி என்பது மாணவர்களின் திறனை வளர்க்கும் உரிமை. அதை மொழித் திணிப்புக்கான கருவியாக மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநிலங்களின் கல்வி மற்றும் மொழிக் கொள்கைகளில் ஒன்றிய அரசு தொடர்ச்சியாக தலையிட முயல்வது, இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான செயலாகும்.

தமிழ்நாடு பலமுறை தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய பிறகும், புதிய புதிய வடிவங்களில் மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் செயலாகும்.

ADVERTISEMENT

எனவே, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின் பெயரில் எந்தவிதமான நேரடி அல்லது மறைமுக மொழித் திணிப்பையும் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா காட்டிய வழியில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் காத்த கொள்கையில், மதிப்பிற்குரிய கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் மொழி உரிமையையும் இருமொழிக் கொள்கையையும் பாதுகாக்கும் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் உறுதியாக நிற்கும்.

மொழித் திணிப்பை எதிர்ப்போம்!
இருமொழிக் கொள்கையை காப்போம்!
தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம்!” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share