உங்களுக்கு விருப்பமில்லை என்றால் ‘சிபிஎம் கூட்டணியில் இல்லை’ என்று சொல்லுங்கள். அதை விடுத்து ஒட்டுமொத்த ‘திமுக கூட்டணியே இல்லை’ என சொல்வதற்கு நீங்கள் யார்? என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை கொங்கு ஈஸ்வரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்ற நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் போன்ற கட்சிகள், தேர்தலுக்குப் பின் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தன. அதைத் தொடர்ந்து அவர்கள் அமைச்சரவையிலும் பங்கெடுத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இருந்த சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இச்சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், “திமுக கூட்டணி என்பது தேர்தலுக்குப் பின்பாக இல்லை” என்று தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “நாங்கள் தேர்தலுக்காக மட்டும் திமுகவுடன் இல்லை, இது ஒரு கொள்கைக் கூட்டணி என மேடைகளில் பேசியவர்கள், தற்போது என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள்! ‘திமுக கூட்டணியே இல்லை’ என்று சொல்வதற்கு நீங்கள் யார்? நாங்கள் எல்லாம் இந்த கூட்டணியில் இல்லையா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “உங்களுக்கு விருப்பமில்லை என்றால் ‘சிபிஎம் கூட்டணியில் இல்லை’ என்று சொல்லுங்கள். அதை விடுத்து ஒட்டுமொத்த ‘திமுக கூட்டணியே இல்லை’ என சொல்வதற்கு நீங்கள் யார்? என்ன நினைத்துக்கொண்டு இவர்கள் எல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.
அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், “இன்னொருத்தர் இரண்டு எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு, தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தமிழ்நாட்டில் அவர் மட்டும்தான் ஒரே கொள்கைத் தலைவராம்! ஆனால் இரண்டே எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு, தன்னை முதலமைச்சர் ஆக்குங்கள் என்று இரண்டு நாட்களாகக் கதவைத் திறந்து வைத்து காத்துக்கொண்டிருந்தார்” என விமர்சித்தார்.
மேலும், தேர்தலுக்குப் பின்னர் அணி மாறுவது குறித்துக் கடுமையாக விமர்சித்த அவர், வைகோவின் பெயரையும் குறிப்பிடாமல் சாடினார். வைகோ குறித்துப் பேசுகையில், “இன்னொரு தலைவர், ‘நான் கலைஞரை விட்டுப் பிரிந்து தவறு செய்துவிட்டேன். இனி எனது கடைசி மூச்சு உள்ளவரை ஸ்டாலின் அவர்களுடன் தான் இருப்பேன்’ என்று தெரிவித்தார். ஆனால் அவரே இப்போது, ‘கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது’ என்கிறார். என்ன அநியாயம் இது! இவர்களை எல்லாம் பெருந்தன்மையுடன் அரவணைத்துச் சென்ற திமுக தலைவருக்கே இது ஒரு நல்ல பாடம்” என்று விமர்சித்தார்.
ஈஸ்வரனின் இந்த ஆவேசமான பேச்சை திமுகவினர் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
