தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை இன்று (ஜூன் 11) சிபிஐ மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த பெருந்துயரச் சம்பவம் தொடர்பாக, அஜய் ரத்தோகி கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால், இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விசாரணை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது சிபிஐ தனது விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளது.
அன்று கூட்ட நெரிசலின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட காவலர்களுக்குச் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில், சையது அலி உள்ளிட்ட சில காவலர்கள் சிபிஐ விசாரணையில் ஆஜராகியுள்ளனர்.
