”ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னரும் கூட பொறுப்பே இல்லாமல் பேசுவதா?” என முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான தவெக அரசை கடுமையாக விமர்சித்தார் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி (Kanimozhi) எம்.பி.
சென்னையில் இன்று ஜூன் 11-ந் தேதி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க மகளிரணி அணி சார்பில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் நிகழ்வில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: இந்த அரங்கத்திற்குள் நான் நுழைந்தபோது, இங்கே சில சகோதரிகள் என்னை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டார்கள். மேடையிலே கூட இறுக்கமான முகத்தோடும், கனத்த மனத்தோடும், கண்களிலே கண்ணீரோடும் உரையாற்றியவர்களை நாம் பார்த்தோம்.

வெற்றி தோல்வியும் கலைஞரும்
ஒன்றை நாம் நினைவிலே வைத்துக்கொள்ள வேண்டும். தலைவர் கலைஞர் அவர்களுடைய பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தன் வாழ்நாளில் தான் போட்டியிட்ட இடங்களிலே தோல்வியைக் காணாத ஒரு தலைவர் என்றால், அது தலைவர் கலைஞர் அவர்கள். ஆனால் பொதுவாழ்க்கையிலே இயக்கத்தின் எத்தனையோ தோல்விகளைத் தன் தோளில் சுமந்த தலைவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள்.

கலைஞர் அறிவுரை என்ன?
கலைஞர், ஆட்சிப் பொறுப்பிலே இருந்த காலகட்டத்தை விட, ஆட்சிப் பொறுப்பிலே இல்லாமல் எதிர்க்கட்சியாகப் பணியாற்றிய காலங்கள்தான் அதிகம். ஆனால் அவர் தன்னுடைய வாழ்க்கையின் தாரக மந்திரமாகக் கொண்டது, “நாம் ஒருவருக்கு நல்லது செய்கிறோம் என்றால், அவர்கள் அதற்காக நன்றியோடு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. அப்படி இல்லை என்ற காரணத்திற்காக நாம் நன்மைகளைச் செய்வதை நிறுத்திவிடக்கூடாது. தொடர்ந்து அவர்களுக்காகப் பணியாற்ற வேண்டியது நம்முடைய கடமை” என்று தன் வாழ்நாள் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்ட தலைவர், தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய பிறந்தநாளை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
நான் பலமுறை பார்த்திருக்கிறேன், இப்பொழுதாவது ஒரு 4 மணிநேரத்துக்குள்ள நமக்கு தேர்தல் முடிவுகள் தெரிஞ்சிருது. முன்னாடியெல்லாம் ஓட்டு எண்ணுவாங்க. பெட்டியத் திறந்து எண்ணி, தகராறு நடக்கும், சண்டை நடக்கும், எல்லாத்தையும் தாண்டி அந்த முடிவுகள் மாலை வர வரத்தான் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும். அப்படி மதியமெல்லாம் ஒரு இறுக்கமான சூழல் இருக்கும். அதைத் தாண்டி மாலை வர வர தோல்வியா, வெற்றியா என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்படக்கூடிய அந்த நேரத்திலேயே, அடுத்த நாள் நன்றி அறிவிப்புக் கூட்டம் என்று அறிவித்த தலைவன்தான், தலைவர் கலைஞர் அவர்கள்.
அடுத்தடுத்த பணிகள்தான் கலைஞர் பாணி
அடுத்த நாள் முரசொலியிலே, உடன் பிறப்புகளுக்காகக் கடிதம் எழுதிய தலைவர்தான் தலைவர் கலைஞர் அவர்கள். அடுத்த பணி என்ன, அடுத்த போராட்டம் என்ன, அடுத்த ஆர்ப்பாட்டம் என்ன, மக்களுக்காக எதற்காக குரல் கொடுக்க வேண்டும், எதற்காகப் போராட வேண்டும், எந்த கருத்துக்களை நாம் அங்கே சட்ட மன்றத்திலே எடுத்து வைத்து அங்கே வாதாட வேண்டும், பேச வேண்டும், யார் எதைப்பற்றி பேச வேண்டும் என்று அடுத்த நிமிடமே சிந்திக்கத் தொடங்கிய தலைவர்தான், தலைவர் கலைஞர் அவர்கள்.
தளர வேண்டாம்- கனிமொழி (KANIMOZHI) வேண்டுகோள்
அதனால் வெற்றி, தோல்விகள் என்பது நம்முடைய இயக்கத்திற்குப் புதிது இல்லை. இந்தத் தோல்வியைக் கண்டு நாம் மனம் தளரவோ, கண்ணீர் விடவோ எந்த அவசியமும் இல்லை.

வீரியமாக பேசும் பெண்கள்
ஒரு மகிழ்ச்சி. இத்தனை வீரியத்தோடு, தைரியத்தோடு, அழுத்தத்தோடு, தெளிவோடு பேசக்கூடிய இத்தனை பெண்களைக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் உணரத் தொடங்குகிறோம். இல்லையா? அதற்கே நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
ஸ்டாலின் திட்டங்கள்
எத்தனையோ திட்டங்களை நம்முடைய முதலமைச்சர், அண்ணன் தளபதி அவர்கள் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். அந்தத் திட்டங்களெல்லாம் தொடருமா? என்ற கவலை அத்தனை பேருக்கும் இருக்கிறது. அது நமக்கும் இருக்கு, ஓட்டு போட்டவங்களுக்கும் இருக்கு. போட்டுட்டோம். சிலபேர், ‘ஒரு ஓட்டு தானே நினைச்சுப் போட்டேன்னு’ சொல்றவங்க கூட இருக்காங்க. அது எப்படி இப்படி நெனச்சுப் போட்டாங்கன்னு எனக்குத் தெரியல. ஆனால் நான் போட்டுட்டேன். ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களெல்லாம் தொடர்ந்து வருமோ, வராததோ என்ற அந்த பயத்திலே இன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். .
திமுக மீது பழி போடுவது..
ஏன்னா, முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்ட அன்றே என்ன சொன்னாரு? பணம் இல்லைன்னு.. அதனால மொதல்லயே அதுக்கான ஒரு தளத்தை உருவாக்கி விடுகிறார்கள். இப்ப எது கேட்டாலும், தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள். சில நேரம் எதிர்க்கட்சியோட விமர்சனம் இருந்த பொழுது, எது நடந்தாலும் அது என் மேல தான் பழி வரும். அவங்க வீட்ல இருக்கக்கூடிய நேரத்துல ஏதாவது தடுமாறி விழுந்துட்டாங்கன்னா கூட, கருணாநிதி தான் அங்க கொண்டு வந்து எண்ணைய ஊத்தி வச்சாரு, அதனால விழுந்துட்டேன்னு சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் பலமுறை சொல்லியிருக்கிறார். இன்னைக்கு ஆட்சியும் அப்படித்தான் நடந்துகிட்டு இருக்கு. எதுவாக இருந்தாலும் முன்னாடி இருந்தவங்க பணம் இல்லாம செஞ்சிட்டாங்கன்னு சொல்றாங்க..
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினமும் நடந்து கொண்டிருக்கக்கூடிய குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இந்த அரசு கட்டுப்படுத்த முடியாமல் நிறுத்த முடியாமல் இருக்கக்கூடிய சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னைக்கு நடக்கக்கூடிய குற்றங்களைப் பற்றிக் கேட்டால், அது வந்து அதுவும் திமுக ஆட்சியிலே, அவர்கள் தவறவிட்டதினால் நடந்து கொண்டிருக்கிறது. எப்படி? திட்டங்களைத் தொடர முடியுமா? என்று கேட்டால், திமுக ஆட்சியிலே ஒண்ணும் இல்லாம பண்ணிட்டுப் போயிட்டாங்க. கரண்ட் ஏன் போகுது? நாலு மணி நேரம் கரண்ட் இல்லை. அதுக்கு அமைச்சர் என்ன பதில் சொல்றாரு? பியூஸ் எடுத்துட்டு போயிடறாங்களாம். இப்படி எதற்கு எடுத்தாலும் நம்மை குறை சொல்லக்கூடிய, அது ஒண்ணுதான் அவங்களுக்குத் தெரிஞ்ச பதில். எந்தப் பிரச்சனையையும் தீர்ப்பதற்கு அவர்கள் சிந்திப்பதற்குத் தயாராக இல்லை.

மக்களை காப்பாற்றாத அதிமுக ஆட்சி
நம்முடைய அண்ணன் தளபதி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொண்ட பொழுது, அதற்கு முன்னால் 10 வருஷம் அதிமுக ஆட்சி இருந்தது. அங்கே ஆட்சி எப்படி நடந்ததுன்னு நமக்குத் தெரியும். கோவிட் காலத்தில கூட மக்களைக் காப்பாற்றத் தவறிய ஒரு ஆட்சி நடைபெற்றது. ஆனால், ஆட்சி பொறுப்பு கூட ஏத்துக்கல. நம்முடைய முதலமைச்சர், அண்ணன் தளபதி அவர்கள், பொறுப்பு கூட ஏத்துக்கல. வெற்றி பெற்றுவிட்டோம் என்று தெரிந்த உடனேயே, அதிகாரிகளை எல்லாம் அழைத்து, மக்களை எப்படி ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்ட உடன் காப்பாற்றுவது என்று சிந்திக்கத் தொடங்கிய நம்முடைய திராவிட இயக்கம், திராவிட மாடல் அதுதான்.
பொறுப்புக்கு வந்த பிறகும் பொறுப்பில்லாமல்..
ஆனால் இன்னைக்கு ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகும் பொறுப்பில்லாமல் பேசிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு சூழலை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எதுவா இருந்தாலும் எந்த இன்னைக்கு சிங்கப்பெண் படை என்று இருந்த ஒன்றை, புதுசா பேரு இங்க எல்லாரும் சொன்னாங்கல, காப்பி, பேஸ்ட் ஸ்டிக்கர்னு. கிட்டத்தட்ட எந்த திட்டம் இருக்குன்னே தெரிய மாட்டேங்குது உங்களுக்கு. தெரிஞ்சாதானே நாம புதுசா பண்றோமா, இல்லையான்னு உங்களுக்குத் தெரியும். முதல் முதலாக பெண்களைக் காவல்துறையிலே கொண்டு வந்தது, தலைவர் கலைஞர் அவர்கள். பெண்கள் பாதுகாப்புக்காக, ஒரு தனியாகப் பிரிவை உருவாக்கியது நம்முடைய ஆட்சியிலே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே நம்முடைய அண்ணன் தளபதி அவர்கள். இன்னைக்கு புதுசா பேரு கொடுத்து, யூனிபார்ம் கொடுத்தீங்கன்னா, அது வந்து புதுத் திட்டமா மாறிடுமா?
பெண்கள் பாதுகாப்பு
பெண்களை தயவுசெய்து இந்த ஆட்சியிலே பாதுகாக்க வேண்டும். நீங்கள் எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்து வந்தீங்களோ அதையே செய்யுங்க.
6 சிலிண்டர் வருமா?
இன்னைக்கு ஆட்சி பொறுப்பிலே இருக்கக்கூடியவர்கள் எதேதோ சொன்னாங்க. 6 சிலிண்டர் வரும்னு காத்துக்கிட்டு இருக்கீங்கல்ல. இன்னைக்கு ஒரு சிலிண்டர் கிடைக்கிறதே பெரிய கனவாக மாறிக்கொண்டிருக்கக்கூடிய சூழலிலே, 6 சிலிண்டர் எப்படி வரும்?
நிதி நிலை அறிக்கையும் கடனும்
ஒவ்வொரு முறையும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது நிதி நிலை என்னன்னு, அமைச்சர்கள் தெளிவாக எடுத்து வைக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் பார்த்திட்டு இல்லைனா பார்க்க மறந்துட்டாங்கன்னு தெரியல. அதனால, தேர்தல் நேரம் வந்தபொழுது நெனச்சதெல்லாம் எடுத்துச் சொல்லி தேர்தல் முடிஞ்சு ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு நிதி இல்லை என்கிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த போதும் நிதி மிகை மாநிலமாக இல்லை. ஒரு மாநிலம் வளரக்கூடிய மாநிலம் நிச்சயமாகக் கடன் வாங்கித்தான் மக்களுக்காகச் செலவு செய்யும், செய்ய வேண்டும். இது அடிப்படை பொருளாதாரம். அதனால, நிதி மிகுதியாக இருக்குறதுக்கு வாய்ப்பில்லை. அதுக்குனு ஒரு அளவு இருக்கு. அதைத் தாண்டக்கூடாது. அதைத் தமிழ்நாடு தாண்டியது கிடையாது.
ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு
எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும், உங்களை விட நூறு மடங்கு ஒன்றியத்திலே இருந்த ஆட்சியை எதிர்த்தவர்கள் நாங்கள், எதிர்த்துக் கொண்டிருக்கக்கூடியவர்கள் நாங்கள்.
முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு போகுது..
தமிழ்நாட்டிலே வந்து எப்படி இந்த திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள் என்று கற்றுக்கொண்டு போன, ஒரு நிலை தமிழ்நாட்டிலே இருந்தது. ஆனால் இன்னைக்கு தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள் எங்க போகுதுன்னு தெரியல. எல்லா மாநிலத்திற்கும் போகுது.
தமிழ்நாட்டிற்கு எத்தனையோ லட்ச கோடி முதலீடுகளைக் கொண்டு வந்த ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் வருத்தத்தோடு சொல்கிறேன், என்னுடைய தொகுதிக்கு கப்பல் கட்டும் தொழிற்சாலை வரவேண்டி இருந்தது. M.O.U சைன் பண்ணியாச்சு. இன்னைக்கு இல்லை.
ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடிய ஒரு தொழிற்சாலை, உப்பளங்களிலே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த, அந்த மக்களுக்கு ஒரு மாற்று பாதையை, எதிர்காலத்தை உருவாக்கித் தரக்கூடிய ஒரு தொழிற்சாலை இன்னைக்கு இல்லை. இதுதான் மாற்றமா? இந்த மாற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை.
திமுகவின் கடமை
பெண்களைப் பாதுகாக்க வேண்டியது, ஆட்சி பொறுப்பிலே இருக்கறவங்களுக்கு கடமை இருக்கோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய கடமையைச் செய்ய என்றும் தவறியதில்லை.
ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறோமா இல்லையா அப்படிங்கிறதெல்லாம் திமுக காரங்களுக்கு கவலையே கிடையாது. தலைவர் கலைஞர் அவர்களுடைய உடன் பிறப்புகளுக்கு, மக்களைப் பாதுகாப்பது மட்டும்தான் கடமை.
அதனால, ஆட்சியிலே இருந்தாலும், எதிர்க்கட்சியாக இன்று இருந்தாலும், தொடர்ந்து மக்களுக்காகப் போராடுவோம், மக்களைப் பாதுகாப்போம்.
ஸ்டாலின் பாதையில் பயணிப்போம்
நம்முடைய கழகத் தலைவர் ஸ்டாலின் நமக்கு வகுத்துக் கொடுக்கக்கூடிய பாதையிலே, தலைவர் கலைஞர் அவர்கள் வழியிலே, தொடர்ந்து மக்களுக்காகப் பாடுபடுவோம், மக்களுக்காகப் போராடுவோம். அவங்க எந்த முடிவெடுத்தாலும் பரவாயில்லை, ஆனால் நம்முடைய முடிவு, தமிழ்நாட்டு மக்களுக்காகப் பணியாற்றுவது, பணியாற்றுவது என்பதை அவர்களுக்காக உறுதியோடு நிற்போம் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
