தனி மனித ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கம் என எல்லாருக்கும் தெரியும். இப்படி பேசி தனது பொறுப்பில் இருந்து முதல்வர் கை நழுவ பார்க்கிறாரா என திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் இன்று முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,“சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்கவிழா என்பது ஒரு ஆடியோ லான்ச் போல இருந்தது. எப்படி எல்லா பிரச்சார பயணமும் ஒரு சினிமா ஒத்திகை பார்த்தது போல் இருந்ததோ, அதேபோல் இது ஆடியோ லான்ச் போன்று ஒரு நிகழ்ச்சியாக நடந்தது. அதற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது. எந்த ஒரு முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்களோ, பொய் செய்திகளை எடுத்துச் சென்றார்களோ, அதேபோல் தவெகவினர் இன்று வரை திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி பொய் செய்திகளை பரப்புவதோடு, அவர்களது முதலமைச்சரை மிக உயர்வாக சொல்லிக் கொண்டு உள்ளனர்.
உதாரணமாக, தூத்துக்குடியில் நான் அமைச்சராக இருந்தபோது 850 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டன. இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மறுநாளே ‘எங்கள் முதலமைச்சர் சிசிடிவி கேமராக்கள் வைத்து விட்டார்’ என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. அதேபோல், நமது பகுதியில் மாணவர்களுக்காக ஏசி பஸ் ஸ்டாப் எனது சட்டமன்ற நிதியில் வைத்தோம். ஆனால் அதை தற்போது ‘மாணவர்களுக்காக ஒரு ஏசி பஸ் ஸ்டாப் வைத்து விட்டோம்’ என்று சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.
ஒரு குழந்தை பெறுவதற்கே 10 மாதம் ஆகும். ஆட்சி மாறியவுடன் எல்லாம் ‘நாங்கள் தான், நாங்கள் தான்’ என்று சமூக ஊடகங்களில் பொய் செய்தியை ப்ரோமோட் செய்கின்றார்கள். இனி மக்கள் எல்லோரும் வரும் செய்திகள் உண்மையா என்பதை ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
அதேபோல், ‘தனிமனித ஒழுக்கம் தான் முக்கியம், தனிமனித ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கம்’ என்று பேசுகிறார் முதல்வர். இது ஒரு பெரிய கண்டுபிடிப்பு தத்துவமா? இது எல்லோருக்கும் தெரியும். அதைச் சொல்லிவிட்டு அவர் தனது பொறுப்பிலிருந்து கைநழுவ நினைக்கிறாரா என்பது எங்களது சந்தேகம். சட்டம் ஒழுங்கு, பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆளும் ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு.
சென்னையில் நடந்த சிறுமி வன்கொடுமை, ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பிரச்சனை ஆகியவற்றில் தவெக கட்சியினர் ஈடுபட்டுள்ள நிலையில் நீங்கள்
ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் எங்களுடைய கேள்வி. உங்களுடைய கட்சியினரை அழைத்து நடவடிக்கை எடுங்கள். இது போல் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். தவெக எம்எல்ஏ பெயரைச் சொல்லி அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அவரையும் அழைத்து நீங்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது எல்லாவற்றிற்கும் ‘சிஎம் சார்’ தான் பொறுப்பு என்று கூறினீர்களே. இப்போது விஜய் முதல்வரான உடன் ‘தனிமனித ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கம்’ என்று சொல்கிறீர்கள். அப்போது இருந்த சிஎம் சார்க்கு மட்டும் சமூக ஒழுக்கம் என்று சொல்லத் தெரிகிறதா? அப்படி என்றால் நீங்கள் வசனம் பேசவில்லையா, புரிந்து பேசுகிறீர்களா என்று கேள்வி எழுப்புகிறேன்.
அதேபோல் கடந்த ஆட்சியில் மு.க. ஸ்டாலின் ‘துணிந்து புகார் அளியுங்கள்’ என்று மக்களிடம் சொன்னார். அதேபோல் எல்லா பெண்களும் துணிந்து புகார் தர முன்வந்தார்கள். ஆனால் இன்று உங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கே உங்கள் கட்சியினரால் இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், எந்தப் பெண் துணிந்து புகார் தர வருவார் என்பது தான் எனது கேள்வி.
அதேபோல் தவெகவினரின் அட்டகாசம் மிக அதிகம். எல்லா கடைகளிலும் மாமூல் கேட்கின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நியமிக்கும் ஆசிரியரை கூட, நாங்கள் தான் பரிந்துரை செய்வோம்’ என்று மிரட்டுவது, தலைமை ஆசிரியர்களை சந்தித்து மிரட்டி போட்டோ எடுத்து அவதூறு பரப்புவது, டாஸ்மாக்கில் சென்று கூட ‘எங்களது தலைவர் காலண்டரை தான் போட வேண்டும்’ என்று சண்டை போடுகிறார்கள். இந்த அராஜகங்கள் எல்லாம் முதலமைச்சருக்குத் தெரிந்துதான் நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா?” என்று முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
