சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டி, பல்வேறு புதிய யுக்திகளைக் கையாண்டு வரும் தமிழக தேர்தல் ஆணையம் கடந்த மாதம் பிரபல சமூக வலைதளமான ட்விட்டருடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதன்படி, ட்விட்டரில் உள்ளவர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள், ஸ்மைலிகள் அனுப்பப்படும். மேலும், தேர்தல் தேதியன்று நீங்கள் இன்று வாக்களிக்க வேண்டும் என ட்விட்டர் சமூக தளம் நினைவுபடுத்தும். அதேபோல, தேர்தலில் வாக்களித்துவிட்டு, நான் வாக்களித்துவிட்டேன் என ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டால், பிரபல நடிகர்களின் கையெழுத்திட்ட புகைப்படங்கள் ட்விட்டரில் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ட்விட்டரை விட பலரையும் கவர்ந்த பேஸ்புக் மூலமும் தமிழக தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இது குறித்து தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, தமிழக தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஏற்கனவே ட்விட்டர் இணைந்துள்ள நிலையில், பேஸ்புக் மூலமும் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த பேஸ்புக் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பொது திட்ட இயக்குனர் அன்கி தாஸ் வருகிற 11 ஆம் தேதி சென்னை வருகிறார் ” என்றார்.