”கல்வி நிலையங்களும் கோயில்கள்தான்” : எடப்பாடி பழனிசாமிக்கு கே.பாலகிருஷ்ணன் பதில்!

Published On:

| By vanangamudi

Educational institutions are also temples

கோயில் பணத்தை கல்விக்காக செலவழிப்பதை குறை சொல்வதா என எடப்பாடி பழனிசாமிக்கு சிபிஐ(எம்) முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். Educational institutions are also temples

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம” என்ற பெயரில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். 

ADVERTISEMENT

நேற்று (ஜூலை 8), இரண்டாவது நாளாக கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

வடவள்ளி பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், “கோயிலை கண்டாலே சிலருக்கு கண்ணை உறுத்துகிறது. அதில் இருக்கும் பணத்தை எடுத்து கல்லூரி கட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். கோயில்களை கட்டுவதற்காகவும் விரிவு படுத்துவதற்காகவும் நல்லுள்ளம் படைத்தவர்கள் உண்டியலில் பணம் போடுகிறார்கள். அது அறநிலையத்துறைக்கு போய் சேருகிறது. 

ADVERTISEMENT

ஆனால் அந்த பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள். அறநிலையத்துறையில் இருந்து பணத்தை எடுத்து எதற்காக அதற்கு செலவு செய்ய வேண்டும். 

கல்விக்கு செலவு செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை அரசாங்க பணத்தில் இருந்து கொடுக்கலாம். ஏன் அரசாங்கத்திடம் பணம் இல்லையா. 

ADVERTISEMENT

அதிமுக ஆட்சியில் பல்வேறு கல்லூரிகள் கட்டப்பட்டன. அவை அனைத்தும் அரசாங்க பணத்தில் தான் கட்டப்பட்டது. 

ஆனால் இந்த ஆட்சியில் அறநிலையத்துறை பணத்தை எடுத்து இதற்கு செலவழிப்பது எந்த விதத்தில் நியாயம்? “என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

எடப்பாடி பழனிசாமியின் பேச்சு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், எதிர்ப்புகளும் வலுத்து வருகிறது.

இதுபற்றி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) முன்னாள் மாநிலச் செயலாளரும், பொலிட் பீரோ உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணனை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 

“எடப்பாடி பேசுவதை நினைத்து சிரிப்பதா வேதனை அடைவதா என்று எனக்கு தெரியவில்லை. கல்வி நிலையங்களும் கோயில்தான். கோயில் உண்டியலிலும், சாமி தட்டிலும் பணம் போடுவது மக்கள்தான். எனவே அந்த பணத்தை கல்விக்காக செலவழிப்பது தவறல்ல. 

கோயில் மூலம் அறநிலையத்துறைக்கு வரக்கூடிய பணத்தில்,  பள்ளி கல்லூரிகள் என கல்விக்கூடங்கள் கட்டுவதும் கல்விக்காக செலவு செய்வதும் புதிதல்ல. 

காமராஜர் காலத்தில் 1963 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும்  பண்பாட்டுக் கல்லூரி கட்டப்பட்டது. இதே ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை அருகே ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி கட்டப்பட்டது.

1964 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி கட்டப்பட்டது. அதே ஆண்டில் நாகை மாவட்டம் மேலையூரில் பூம்புகார் கலை கல்லூரி கட்டப்பட்டது. 

1970 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனி ஆண்டவர் மகளிர் கலைக்கல்லூரி கட்டப்பட்டது.

இப்படியாக காமராஜர் ஆட்சியில் நான்கு கல்லூரிகளும் கலைஞர் ஆட்சியில் ஒரு கல்லூரியும் திறக்கப்பட்டது. 

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அருள்மிகு கபாலீஸ்வரர் கல்லூரி கடந்த 2021ல் திமுக ஆட்சியில் அமைச்சர் சேகர்பாபுவால் திறக்கப்பட்டது.

இப்படி அறநிலைத்துறை நிதியின் மூலம் தமிழகத்தில் ஆறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

கோயில் நிதியை கல்விக்காக செலவு செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி தான், 2017 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு பழனி ஆண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். இதை மறந்துவிட்டாரா அல்லது அவருக்கு நினைவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். 

மேலும் அவர், தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும், ஆந்திராவிலும் கோயிலுக்கு வரக்கூடிய வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை கல்விக்காக செலவழிக்கிறார்கள். 

ஆகையால், அறநிலையத்துறை மூலமாக வரக்கூடிய பணத்தை மூட்டை கட்டி போடாமல் கல்விக்காக செலவழிப்பதை பாராட்ட வேண்டும். கோயில் நிதியை யாகசாலைக்கு செலவழிப்பதை விட கல்வி சாலைக்கு செலவழிப்பது எவ்வளவோ மேல்” என்று கூறினார். Educational institutions are also temples

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share