விஜய்யின் 100 நாட்கள் ஆட்சி- விளாசிய எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Mathi

Edappadi Palaniswami Slams Vijay’s 100-Day Governance

முதல்வர் விஜய் தலைமையிலான 100 நாட்கள் ஆட்சியில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை; ரீல்ஸ் மட்டும்தான் போடப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலத்தில் இன்று ஆகஸ்ட் 15-ந் தேதி செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது. அந்தக் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அரசு வரும் திங்கட்கிழமையன்று முழுமையான விவரங்களைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளது. இது மிகவும் கொடுமையான செயலாகும்.

ADVERTISEMENT

படித்துத் தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் பெற்றோர்கள் மாணவர்களைக் கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், கல்லூரியில் பயிலும் மாணவர்களிடையே ஏற்படும் சச்சரவுகளால் ஒரு மாணவன் உயிர் இழப்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். இது மிகமிக வேதனையான விஷயமாகும். எனவே, அரசு இதில் முழு கவனம் செலுத்தி, இந்த மாணவனின் மரணத்திற்கு யார் யாரெல்லாம் காரணமோ அவர்கள் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சில பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன. இருப்பினும், போதைப்பொருள் புகார் அளித்ததால்தான் அந்த மாணவன் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் உள்ளது.

ஆனால், கல்லூரி நிர்வாகம் அதனை ஒட்டுமொத்தமாக மறைப்பதாக ஒரு குற்றச்சாட்டும் நிலவுகிறது. நான் ஏற்கனவே கூறியுள்ளதைப் போல, இது குறித்து எங்களது சட்டமன்ற உறுப்பினர்களும் மற்ற எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் பலமுறை சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்களைக் கொண்டுவந்துள்ளனர். அப்போது அமைச்சர்கள் இது குறித்து வரும் திங்கட்கிழமையன்று முழுமையான விளக்கத்தைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. பல மாணவர்கள் ஒன்றிணைந்து தாக்கி மாணவரைக் கொலை செய்ததாக வெளிவரும் செய்திகளின் உண்மைத்தன்மையை விசாரித்தால்தான் அறிய முடியும். எவ்வாறாயினும், அந்த மாணவனின் மரணைத்தை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெற்ற தாயும் தந்தையும் எந்த அளவிற்கு மனவேதனை அடைவார்கள் என்பதை நாம் உணர வேண்டும். மற்ற மாணவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இது போதைப்பொருளினால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் விவகாரத்தின் காரணமாக நடந்ததா என்பதைக் காவல்துறை தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது நிலைபாடாகும்.

ADVERTISEMENT

போதைப் பொருளை கட்டுப்படுத்தவில்லை

போதைப்பொருளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துவோம் என்று தவெக அரசு கூறியது. ஆனால், தற்போது நிலைமை கைமீறிப் போய்விட்டது; நாமும் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் பேசிப் பேசித் தொண்டை வற்றிவிட்டது, அது உங்களுக்கே தெரியும். நம் சேலம் மாவட்டத்திலுள்ள தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நண்பர்கள் அத்தனை பேருக்கும் இது நன்றாகத் தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன நிலை தொடர்ந்ததோ, அதைவிடக் கூடுதலாக இன்றைக்குப் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துவிட்டது. ஐந்து நாட்களுக்கு முன்பு கூட 247 கிலோ போதைப்பொருள் பிடிபட்டதாகப் பத்திரிகைச் செய்திகளிலும் ஊடகங்களிலும் பார்த்தேன். அதாவது, ஒரே கட்டத்தில் பிடிக்கப்பட்டதின் அளவே சுமார் 247 கிலோ என்றால், இன்னும் எவ்வளவு போதைப்பொருள் புழக்கத்தில் இருக்கும் என்பதை நாம் இதிலிருந்து கணக்கிட்டுக் கொள்ளலாம். எனவே, இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு போதைப்பொருள் விற்பனையை அடக்க வேண்டும். ஆனால், அது குறித்துத் தனி கவனம் செலுத்துவது போலத் தெரியவில்லை.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு

இந்தச் சட்டஒழுங்கு சீர்கேட்டிற்குக் முழுமையான காரணமே கஞ்சா விற்பனைதான். அதனைப் பயன்படுத்தும் பொதுமக்களும் இளைஞர்களும் அதற்கு அடிமையாகிப் போதை வெறியில் இது போன்ற தவறான மற்றும் கொடூரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். கஞ்சா போதைக்கு அடிமையாகிவிட்டால் மனிதன் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் இத்தகைய கோரச் செயல்களில் ஈடுபடுகிறான் என்பதே எனக்குக் கிடைத்த தகவலாகும்.

விஜய்யின் 100 நாள் ஆட்சி

100 நாள் ஆட்சியா செய்தார்கள்? ரீல்ஸ் போட்டார்கள், ரீல் விட்டார்கள்; இதுதான் இவர்களது நூறு நாள் சாதனை! மக்களுக்கு வேறு என்ன செய்தார்கள்?

இன்றைக்கு ஒரு கிலோ அரிசி ரூ15-ல் இருந்து ரூ.20 உயர்ந்துவிட்டது. இதுவரை எந்த ஒரு ஆட்சியிலும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய அளவில் விலைவாசி உயர்ந்தது கிடையாது.

இவ்வளவு போராட்டங்களா?

தவெகவின் குறுகிய கால ஆட்சியில் ஏராளமான போராட்டங்களை இந்த அரசு சந்தித்துவருகிறது. இதுவரை எந்தவொரு அரசாங்கமும் தனது ஆட்சியின் தொடக்கத்திலேயே இத்தகைய போராட்டங்களைச் சந்தித்தது கிடையாது. இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம்கூட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வருவாய் மாவட்டத் தலைமைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு விவசாயிகள் மற்றும் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக வெற்றிக்கழக ஆட்சியின் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, 5 ஏக்கருக்குக் குறைவாக வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 75,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடியாம்; அதற்கும் மேல் நிலம் வைத்துள்ள மற்ற அனைத்து விவசாயிகளுக்கும் (சிறு, குறு மற்றும் பெறு விவசாயிகளாக இருக்கட்டும்) வெறும் 35,000 ரூபாய்தானாம் தள்ளுபடி என்று கூறுகிறார்கள். இதனை எப்படிக் ஏற்றுக்கொள்ள முடியும்?

அதிலும் இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவிவருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் மழைப்பொழிவு குறைந்துள்ளதால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

விவசாயம் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் எத்தகைய சாகுபடியும் செய்ய முடியாமல், விளைச்சலும் பெற முடியாமல் வருமானமின்றித் தவிக்கின்றனர். விவசாயிகளிடம் வருமானம் இருந்தால்தானே கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்? அதனால்தான், அளித்த வாக்குறுதியைத் தமிழக வெற்றிக்கழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நேற்றைய தினம் போராட்டம் நடத்தினோம்.

மேகதாது அணை

மேகதாது பிரச்சனை குறித்து நாங்களும் சட்டமன்றத்தில் எங்களது கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். தற்பொழுதும் எவ்வித மெத்தனமும் காட்டாமல், இந்த அரசாங்கம் மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துவதற்குத் துரிதமான மற்றும் வேகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய வழிமுறைகளையும் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டுங்கள்; அதேபோல டெல்டா மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் அழையுங்கள். விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, சட்டப்பூர்வமான வழிகளை நாடி மேகதாது அணை கட்டுமானத்தைத் தடுத்து நிறுத்துங்கள். அவ்வாறு தடுத்து நிறுத்தத் தவறினால், தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்; 20 மாவட்ட மக்களுக்குக் குடிநீர் கிடைக்காமல் போய்விடும், சேலத்திற்குக் குடிநீரே கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடும்.

விவசாயப் பிரச்சனைகள் குறித்து அனைத்துக் கட்சிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும், முதல்வர் விஜய் எதற்கும் செவிசாய்க்கவே இல்லை. அவருக்கு ஒன்றுமே தெரியவில்லையே.. கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள்தான்ஆகிறது.

ஆலோசனைகளை கேட்க மறுப்பு

தமிழ்நாட்டில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைக்காக இவர் இதுவரை எந்தப் போராட்டத்திலாவது கலந்துகொண்டாரா சொல்லுங்கள் பார்க்கலாம்? எதுவுமே இல்லையே?ஏதோ கட்சி தொடங்கினார், மக்கள் இவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துவிட்டார்கள். வாய்ப்பு கிடைத்த பிறகு மற்ற மூத்த கட்சித் தலைவர்கள் கூறும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்க வேண்டும் அல்லவா? ஆனால், அதைக் கேட்கவே மாட்டேன் என்கிறார்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், இன்றைக்குத் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வருவதற்குத் துணையாக நின்ற கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அந்த நியாயமான கருத்தைக்கூட அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

காவிரி அனைத்து கட்சிக் கூட்டம்

காவிரி பிரச்சனையில் முதல்வர் விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை; காவிரி பிரச்சனை மற்றும் காவிரி நதிநீர் விவகாரத்தைப் பற்றி இவருக்குத் துளியளவும் விவரம் தெரியவில்லை. இன்றைக்கு அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில்தான் காவிரி நீரை மீட்பதற்கான அத்தனை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

1986-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர், கர்நாடக அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத காரணத்தினால்தான், 1986-ல் விவசாயச் சங்கம் தொடுத்த வழக்கில் அரசாங்கத்தையும் இணைத்து நாமும் வழக்கு தொடர்ந்தோம்.

ஜெயலலிதாவும் வழக்கு தொடர்ந்தார்கள்; நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை அரதசிதழில் வெளியிட்டார்கள். அதன்பிறகு தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி உச்ச நீதிமன்றத்தை நாடினோம்.

உச்ச நீதிமன்றத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில், நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஒரு சிறப்பான நல்ல தீர்ப்பைப் பெற்றோம். அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் உருவாக்கப்பட்டன. அந்த இரண்டு குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.

இன்றைக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒவ்வொரு மாதவாரியாக எவ்வளவு டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அந்தத் தீர்ப்பை இந்த அரசு சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஜூன் மாதமே இதற்கான முயற்சிகளைச் செய்திருக்க வேண்டும். நமக்கு ஜூன் மாதத்தில் வர வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை அப்போதே எடுத்திருக்க வேண்டும். ஆனால், இப்போது போய் ஆகஸ்ட் மாதத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதத்தில் நமக்கு 45 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும்; ஆனால் ஜூன் மாதமும் தரவில்லை, ஜூலை மாதமும் முழுமையாகத் தரவில்லை. தற்பொழுது ஆகஸ்ட் மாதத்தில் நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரும் கிடைக்கவில்லை. அப்படியானால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி எவ்வாறு பாதிக்கப்படாமல் இருக்கும்? அடுத்து சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் இல்லை. இதற்கெல்லாம் இந்த அரசிடம் என்ன நடவடிக்கை உள்ளது என்பதே தெரியவில்லை.

மேட்டூர் அணை

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் ஜூன் 12-ஆம் தேதியன்று தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. அங்கிருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி செய்தனர். சுமார் 40 நாட்கள் கடந்த பிறகு, நிலத்தடி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்த அந்த விவசாயிகளின் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் முற்றிலுமாகக் காய்ந்துவிட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ₹25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரினோம், ஆனால் அதற்கும் அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

தொழில் முதலீட்டாளர் மாநாடு

அதிமுக ஆட்சிக் காலத்திலும் திமுக ஆட்சிக் காலத்திலும் நடத்தப்பட்டவைதான் தொழில் முதலீட்டாளர் மாநாடு. தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதன்முதலில் 2015-ல் ஜெயலலிதா கொண்டு வந்தார்கள்; 2019-ல் நாங்கள் அதனை வெற்றிகரமாக நடத்தினோம். அதனைத் தொடர்ந்து திமுகவும் நடத்தியது.

பொதுவாகவே ஒரு பெரிய தொழிற்சாலை வந்த பிறகு அதற்கான பகுதி 1, 2, 3 என்று விரிவுபடுத்துவார்கள். உதாரணமாக டாடா நிறுவனம் ஓசூரில் முதல் பகுதி, இரண்டாவது பகுதியைத் தொடங்கினர், மூன்றாவது பகுதியை திமுக ஆட்சியில் தொடர்ந்தார்கள். இப்போது நான்காவது பகுதி… இப்படி ஏற்கனவே தமிழ்நாட்டிலுள்ள தொழிற்சாலைகளைத்தான் விரிவுபடுத்துகிறார்களே தவிர, புதிது புதிதாகப் பெரிய தொழிற்சாலைகள் எவையாவது வந்ததாகத் தெரியவில்லை.

புதிதாக எந்தவொரு பெரிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்த 100 நாட்களில் முதலமைச்சரைப் பார்த்துக் கேள்வி கேட்க முடியுமா? நாட்டின் முதலமைச்சர் இந்த 100 நாளில் என்னென்ன… தமிழக வெற்றிக்கழக அரசு துறைவாரியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை விளக்க வேண்டுமல்லவா? எதையுமே காணோமே..

இன்றைக்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியே கொடுக்க மாட்டேங்கிறாரே…

இன்றைக்குச் சுதந்திர தின விழாவில்கூட… 2036-க்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதுதான் எங்கள் ஆட்சி என்கிறார்கள். அதுவரைக்கும் இவர் ஆட்சியில் இருப்பாரா என்று நீங்களே பாருங்கள்.

இருக்கும் காலகட்டத்தில்கூட எதையும் செயல்படுத்த முடியவில்லை. இன்றைக்குக் காவிரியிலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரைக் கூட அவரால் பெற முடியவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் போராடிப் பெற்ற தீர்ப்பைக் கூட இவரால் காப்பாற்ற முடியாத ஒரு கேள்விக்குறியான நிலையே இன்றைக்கு நீடிக்கிறது.

எதுவுமே இல்லை, விலைவாசி தாறுமாறாக ஏறிவிட்டது; அதைக் கட்டுப்படுத்துவதற்கு இவர் எடுத்த நடவடிக்கைதான் என்ன? கடந்த காலங்களில் தண்ணீர் இல்லாத வறட்சிக் காலங்களில்கூட செப்டம்பர் மாதத்திலாவது தண்ணீர் திறக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அதாவது, அதற்கான குறைந்தபட்ச முயற்சியையாவது செய்ய வேண்டாமா? செய்யவில்லையே!

நமக்குத்தான் இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டதே. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் கர்நாடக அணைகளில் இருந்து கர்நாடக அரசு மேட்டூர் அணைக்குத் தண்ணீரைத் திறக்க வேண்டும். திறக்கவில்லை என்றால் உடனே அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அல்லவா? ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம்தாழ்த்திய பின்னர்தான் தொடங்குகிறார்கள். கர்நாடக அணைகளில் தற்போதும் தண்ணீர் நிரம்பி வழிகிறது, ஆனாலும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. கபினி அணை முழுமையாக நிரம்பிவிட்டது.

இதற்கு மேலும் தண்ணீரைத் தேக்கினால் அணை உடைந்துவிடும் அபாயம் உள்ளது. அந்தப் பாதுகாப்பு கருதியே உபரி நீர்தான் கபினி அணையிலிருந்து திறக்கப்படுகிறது. அப்படித் தண்ணீர் வந்தால்கூட டெல்டா மாவட்டங்களில் எந்தவொரு மராமத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதைப் பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை; இவர்கள் எதைப்பற்றித்தான் கவலைப்படுகிறார்கள் என்பது இவர்களுக்கே வெளிச்சம்!

என்ன நடக்கிறது என்பதே முதல்வர் விஜய்க்கு தெரியவில்லை

கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகள்தான் ஆகிறது; நாட்டில் என்ன நடக்கிறது என்பதே இவருக்குத் தெரியவில்லை. அல்லது பொதுமக்கள் கூறுவதையாவது செவிமடுத்துக் கேட்க வேண்டும், இல்லை என்றால் மற்ற கட்சிகளின் தலைவர்கள் சொல்வதையாவது கேட்க வேண்டும். உங்களைப் போன்ற ஊடக நண்பர்களும் பத்திரிகை நண்பர்களும் சுட்டிக்காட்டும் குறைகளையாவது பார்த்துத் திருந்த வேண்டும். எதையுமே செயல்படுத்தாத ஒரு மவுனமான முதலமைச்சர்தான் நம்முடைய விஜய் அவர்கள்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் தங்களது சாதனைகளைப் போலப் பீற்றிக்கொண்டு மக்களை ஏமாற்றுவதுதான் மிகப்பெரிய ஏமாற்று வேலை.

ஒரு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு திட்டத்தை அறிவிக்கிறார்கள் என்றால், அதற்கு ஒரு பெயரைச் சூட்டுகிறது; நாளை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தப் பெயரைச் சொல்லும்போது எந்த ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது என்றுதான் வரலாறு பேசும். நாம் பெற்ற பிள்ளைக்கு நாம் பெயர் வைத்துள்ளோம், மீண்டும் வந்து மற்றொருவர் அதற்கொரு புதிய பெயரை வைக்க முடியுமா? அது எந்த வகையில் நியாயமாகும்? நீங்கள் புதிய திட்டங்களைக் கொண்டு வாருங்கள், புதிய பெயர்களைச் சூட்டுங்கள்; அதை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு இவர்கள் தங்களது பெயர்களைச் சூட்டுவதன் காரணம் என்ன? அடுத்த பட்ஜெட்டிலாவது செய்வார்களா… ஏனென்றால் இவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.

வெற்றிட ஆட்சிதான் வெற்றி அல்ல

‘வெற்றி வெற்றி வெற்றி’ என்று கூறிக்கொண்டே ஆட்சி இப்போது வெற்றிடமாகிவிட்டது. 100 நாளிலும் எதுவும் செய்யவில்லை, இனிவரும் பட்ஜெட்டில்கூட இவர்களால் எதையும் நிச்சயமாகச் செய்ய முடியாது.

இதே பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா என்ன சொன்னார்? ‘மூன்று மாதம் பொறுத்திருந்து பாருங்கள், எங்கள் ஆட்சியின் சாதனையைப் பாருங்கள்’ என்று அவர்தானே சொன்னார்? என்ன சாதனை? வெறும் ‘ரீல்ஸ்’ விடுவது மட்டும்தான் இவர்களது சாதனையா?

மாலை 5 மணிக்கு போனால்..

மாலை 5 மணிக்குச் சென்றால் அடுத்த நாள் காலை 9 மணிக்குத்தான் வெளியில் வருகிறார்; எப்போதாவது இவரை வெளியே பார்க்க முடிகிறதா? கையை மட்டும் காட்டிவிட்டுச் செல்கிறார். ஆனால், சட்டமன்றத்திற்கு வந்தால் வேறு மாதிரியாகப் பேசுகின்றனர்; அதுகுறித்து நான் இப்போது பேசத் தயாராக இல்லை.

சட்டமன்றம் என்பது நம்முடைய முன்னோர்கள் அலங்கரித்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாமன்றமாகும்; தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஜனநாயகக் கோயில். ஆனால், இன்றைக்குச் சட்டமன்றம் ஒரு சினிமா படப்பிடிப்பு போலக் காட்சி அளிக்கிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share