டிஜிட்டல் திண்ணை: நேருவைக் குறிவைக்கும் ED… அடுத்த அமைச்சர் யார்?

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் கே என் நேரு சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக டிவியில் ஓடிய தகவல் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“ஏப்ரல் 7 ஆம் தேதி காலையில் தொடங்கி அமைச்சர் நேருவின் சகோதரர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சில இடங்களில் நேற்றைய சோதனை முடிவுற்ற நிலையில் இன்றும் சில இடங்களில் சோதனை தொடர்ந்தது. ED targets Nehru… Who will be the next minister?

இந்த நிலையில் இன்று மாலை அமைச்சர் நேருவின் சகோதரர் கே. என். ரவிச்சந்திரனை அமலாக்க துறையினர் விசாரணைக்காக சாஸ்திரி பவனுக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் பரபரப்பு அதிகரித்தது. அமைச்சரின் சகோதரர் நடத்தும் தொழில் நிறுவனங்கள் சார்பாக ஐஓபி வங்கியில் 30 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டிருந்தது. அந்தக் கடனை திருப்பி செலுத்தி விட்ட நிலையில், எந்த பர்பஸுக்காக கடன் வாங்கப்பட்டதோ அதன்படி செலவு செய்யப்பட்டதா என்ற வகையில் ஒரு சர்ச்சை எழுந்தது. அதன் பேரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ஸ்குவாஷ் செய்யுமாறு அமைச்சரின் சகோதரர் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை இதை பயன்படுத்தி ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.

நேருவின் சகோதரர்கள் தொடர்பான இடங்களில் ரெய்டு நடந்து கொண்டிருந்த நிலையில், சட்டமன்றத்தில் அமைச்சர்கள் மத்தியில் இதைப் பற்றிய ஒரு விவாதமே நடந்திருக்கிறது.

கடந்த மார்ச் 25ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.

அப்போது அவர் அமித் ஷாவிடம், ‘வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவின் முக்கியமான அமைச்சர்களுக்கு செலவு பொறுப்பு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த முக்கிய அமைச்சர்கள் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் பொருளாதார பலமாக இருக்கிறார்கள். அவர்களை நோக்கி ரெய்டு நடத்தினால் அவர்களுடைய பணியும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் பொருளாதாரம் முடங்க வாய்ப்பிருக்கிறது’ என்று குறிப்பிட்டு அமைச்சர்கள் பட்டியலையே அமித்ஷாவிடம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி.

அதற்கு பாசிட்டிவான உத்திரவாதத்தையும் எடப்பாடியிடம் அளித்துள்ளார் அமித்ஷா. இந்த பின்னணியில்தான்… சட்டமன்றத்தில் அமித்ஷாவை சந்திப்பதற்கு முன் இருந்ததைவிட அவரை சந்தித்து விட்டு வந்த பிறகு எடப்பாடி பழனிசாமியும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் உற்சாகமாக இருக்கிறார்கள். நான் டெல்லி போய் வந்த பிறகு உதயநிதிக்கு காய்ச்சல் வந்துவிட்டது என்று கூட எடப்பாடி தைரியமாக பேட்டியளித்தார்.

இதை சுட்டிக்காட்டி தங்களுக்குள் பேசிக்கொண்ட திமுக அமைச்சர்கள், ‘எடப்பாடி கொடுத்த பட்டியலின் அடிப்படையில் தான் இப்போது அமைச்சர்களை டார்கெட் வைத்து செயல்பட தொடங்கி இருக்கிறது அமலாக்கத்துறை. இதுவும் இவ்வளவு சீக்கிரம் ஆரம்பித்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ED targets Nehru… Who will be the next minister?

ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் மோடி ராமேஸ்வரத்துக்கு வந்து பாம்பன் பாலத்தை தொடங்கி வைத்தார். நூறு வருடமாக இருந்த பழைய காலத்துக்கு பதில் புதிய தொழில்நுட்பத்துடன் புதுமையான பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.

அதே நாளில் ஊட்டியில் வேறொரு மாநில அரசு நிகழ்வில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாட்டுக்கு வரும்போது அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கவில்லையே என்ற வருத்தம் பிரதமரிடம் இருந்திருக்கிறது. அந்த வருத்தத்தை கோபமாக மாற்றி விட்டார் நமது முன்னாள் நிதி அமைச்சரும் இப்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான பி டி ஆர்.

ராமேஸ்வரம் நிகழ்வை முடித்துவிட்டு மதுரையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடியை அமைச்சர் பி. டி. ஆர். சென்று வழியனுப்பி வைத்தார். அப்போது அமைச்சர் பி. டி. ஆர். கருப்பு நிற முக கவசம் அணிந்திருந்தார். சமீப நாட்களில் அவர் முதலமைச்சரை சந்திக்கும் போது கூட இதே கருப்பு நிற முக கவசம் தான் அணிந்திருந்தார். ஆனாலும் பிரதமர் மோடியை வழியனுப்பி வைக்கும் போது அணிந்திருந்த அந்தக் கருப்பு முக கவசம், வேறு சில சமிக்ஞைகளையும் தெரிவிப்பதாக இருந்திருக்கிறது.

ராமேஸ்வரம் வந்த பிரதமருக்கு மீனவர்கள் பிரச்சனையை அடிப்படையாக வைத்து கருப்புக் கொடி போராட்டத்தை சில அமைப்புகள் அறிவித்தன. ஆனால் அமைச்சர் பி. டி. ஆரோ வழியனுப்புதல் என்ற பெயரில் கருப்பு மாஸ்க்கை பிரதமருக்கு நேருக்கு நேராக சென்று காட்டியிருக்கிறார். இந்தக் கோபமும் அமைச்சர்கள் மீதான அட்டாக்கை முன்கூட்டியே தொடங்கிடக் காரணங்களில் ஒன்றாகிவிட்டதோ’ என்று சட்டமன்ற வளாகத்தில் இன்று விவாதித்துக் கொண்டனர் திமுக அமைச்சர்கள்.


இந்த விவாதத்தின் முக்கியமான மைய கேள்வி, நம்மில் அடுத்த ரெய்டு யாருக்கு என்பதுதான். எடப்பாடி பழனிசாமி கொடுத்த பட்டியல், மத்திய அரசு சேகரித்த பல்வேறு தகவல்கள் அடிப்படையில் அடுத்தடுத்து தமிழக திமுக அமைச்சர்கள் அவர்களது குடும்பத்தினரை நோக்கி மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ரெய்டு அட்டாக்குகளை தொடர்ந்து நடத்தும் என்பது தான் அமைச்சர்கள் தரப்பிலிருந்தே கிடைக்கிற தகவலாக இருக்கிறது. ED targets Nehru… Who will be the next minister?

இதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் இறங்கி விட்டார்கள் அமைச்சர்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share