பள்ளியில் படிக்கும்போது “பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகும்” என்று படித்திருப்போம். ஆனால், அந்தப் பழைய கணக்கு இப்போது மாறுபடுகிறது. சமீபகாலமாகப் பூமி, வழக்கத்தை விடச் சற்று வேகமாகச் சுழலத் தொடங்கியுள்ளது என்றும், இதனால் ஒரு நாளின் நேரம் குறைந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்தச் செய்தி வெறும் வதந்தி அல்ல; இது நவீன ‘அணுக்கடிகாரங்கள்’ (Atomic Clocks) மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை.
என்ன நடக்கிறது? பொதுவாகப் பூமி ஒருமுறை சுழல 86,400 வினாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆனால், 2020 மற்றும் 2022-ம் ஆண்டுகளில், பூமி தனது சுழற்சியை இதைவிடச் சில மில்லி வினாடிகள் (Milliseconds) முன்னதாகவே முடித்துள்ளது. குறிப்பாக, ஜூன் 29, 2022 அன்று பூமி தனது வரலாற்றிலேயே மிகக் குறுகிய நாளாகப் பதிவானது. அன்று பூமி வழக்கமான 24 மணி நேரத்தை விட 1.59 மில்லி வினாடிகள் முன்னதாகவே சுழன்று முடித்தது.
ஏன் இந்த மாற்றம்? பூமி ஒன்றும் எந்திரம் அல்ல; அது உயிருள்ள ஒரு கிரகம். இந்த வேக மாற்றத்திற்குப் பல காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர்:
- பூமியின் மையம் (Earth’s Core): பூமியின் ஆழத்தில் உள்ள திரவ நிலையில் இருக்கும் உருகிய இரும்பு மற்றும் நிக்கல் குழம்பின் அசைவுகள் பூமியின் சுழற்சி வேகத்தை மாற்றலாம்.
- காலநிலை மாற்றம் (Climate Change): துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதால், பூமியின் நிறை (Mass distribution) மாறுகிறது. ஒரு நபர் சுற்றும்போது கைகளை விரித்தால் வேகம் குறைவதும்,டக்கினால் வேகம் அதிகரிப்பதும் போல, பனி உருகுதல் பூமியின் சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
- சந்திரர் விலகல்: பூமியிலிருந்து சந்திரன் மெல்ல விலகிச் செல்வதும் ஒரு காரணம்.
அது என்ன ‘நெகடிவ் லீப் செகண்ட்‘ (Negative Leap Second)? இதுதான் கவலைக்குரிய விஷயம். பூமி மெதுவாகச் சுற்றும்போது, நேரத்தை ஈடுகட்ட நாம் அவ்வப்போது ஒரு வினாடியைக் கூட்டுவோம் (Positive Leap Second). ஆனால், இப்போது பூமி வேகமாகச் சுற்றுவதால், எதிர்காலத்தில் நாம் ஒரு வினாடியைக் கழிக்க (Remove) வேண்டி வரும். இதைத்தான் ‘நெகடிவ் லீப் செகண்ட்’ என்கிறார்கள். அதாவது, உலகக் கடிகாரத்தில் ஒரு வினாடியை நீக்க வேண்டும்.
நமக்கு என்ன பிரச்சனை? சாதாரண மக்களுக்கு இந்த 1 மில்லி வினாடி மாற்றம் தெரியாது. ஆனால், கம்ப்யூட்டர்கள், சாட்டிலைட்டுகள், ஜிபிஎஸ் (GPS) கருவிகள் மற்றும் இணையச் சேவைகள் அனைத்தும் மிகத் துல்லியமான நேரத்தைக் கொண்டே இயங்குகின்றன. திடீரென ஒரு வினாடியை நீக்கினால், மென்பொருள்களில் கோளாறு ஏற்பட்டு, இணையமே ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது. கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு இது தலைவலியாக அமையலாம்.
பூமி ஒரு நிலையான இயந்திரம் அல்ல என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. இப்போதைக்கு ஆபத்து இல்லை என்றாலும், இயற்கை அன்னை நினைத்தால் காலத்தையே மாற்ற முடியும் என்பதற்கு இதுவே சாட்சி!
