தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2024-2025 ஆம் நிதியாண்டில் 11.19 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 2025-2026 ஆம் நிதியாண்டில் இரட்டை இலக்கத்தில் 10.83 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் கேரளம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களுக்கான தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ‘ஒரு டிரில்லியன் டாலர்’ பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நோக்கி மாநில அரசு பயணித்து வருகிறது. இந்த இலக்கை எட்டுவதற்கு ஆண்டுதோறும் 10 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதம் அவசியம் என கருதப்படுகிறது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 28) தனது எக்ஸ் பதிவில், தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!
திராவிட மாடல் தனித்துவமான மாடல்!
சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!
முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!
இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி!
நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.
