கோவா விமான நிலையத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் இந்தி தெரியாதா எனக் கேட்டு அவமதித்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரின் செயலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். CISF soldier insulted Chennai woman
சென்னையை சேர்ந்தவர் ஷர்மிளா ராஜசேகர் (34) . கோவாவுக்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். கோவாவில் உள்ள தபோலிம் விமான நிலையத்தில் செக்கின் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஷர்மிளாவிடம் இந்தியில் பேசியிருக்கிறார்.
அவர் இந்தியில் சொன்னதால் ஷர்மிளாவுக்கு புரியவில்லை. இதனால் அவர் தனக்கு இந்தி தெரியாது என்று சொல்ல அந்த வீரர், எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
“தமிழ்நாடு” என்று ஷர்மிளா பதில் அளித்ததும், தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமென்றால் கூகுளில் தேடி பாருங்கள். இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என்று அந்த வீரர் பாடமெடுத்துள்ளார்.
அவரது பேச்சு ஷர்மிளாவை காயப்படுத்தியிருக்கிறது. விமான நிலையத்தில் நடந்தது பற்றி டிடி நெக்ஸ்ட்டிடம் கூறியுள்ள ஷர்மிளா, “இரவு 8.30 மணிக்கு சென்னை செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக பாதுகாப்பு சோதனைக்காக தனது பைகளை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தேன். பெண்களுக்கான வரிசையில் நின்றிருந்த சிஐஎஸ்எஃப் வீரர், இந்தியில் மற்றொரு டிரேவை எடுக்கச் சொன்னார், அது எனக்கு புரியவில்லை.
எனக்கு இந்தி தெரியாது என்று சொன்னபோது கட்டாயம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த வீரர் என்னிடம் கூறினார். நான் நடத்தப்பட்ட விதம் மனிதாபிமானமற்றது மற்றும் கலாச்சார உணர்வற்றது.
இதுதொடர்பாக விமானத்தில் ஏறுவதற்கு முன், சிஐஎஸ்எஃப் மேற்பார்வையாளரிடம் வாய்வழி புகார் தெரிவித்தேன். அதை தொடர்ந்து அந்த வீரர் என்னிடம் மன்னிப்பு கேட்டார், நடந்தவற்றுக்கு வருந்தினார்” என்று தெரிவித்துள்ளார்.
விமான நிலைய குறைதீர்க்கும் அதிகாரிக்கும் மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளார் ஷர்மிளா.
இந்நிலையில் தமிழ்நாட்டு பெண்ணிடம் இந்தி கற்றுக்கொள்ள சொல்லி விமான நிலையத்தில் பாடமெடுத்த சிஐஎஸ்எஃப் வீரருக்கு முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
“கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். “தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது” என்றும், “இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்” என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?
பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.”
பாமக நிறுவனர் ராமதாஸ்
“விமான நிலையங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரில் பலர், தங்களின் பணி என்ன? என்பதை மறந்து விட்டு, இந்தி தேசிய மொழி, அதைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பயணிகளை அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் அரசியல் கட்சியினர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட அவர்கள் பலமுறை அத்துமீறியிருக்கின்றனர்.
இந்தி மொழி இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல என்ற அடிப்படைக் கூட தெரியாத அவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகளிடமும், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களிடமும் இதுகுறித்து அறிவுரை கூற என்ன தகுதி இருக்கிறது?
இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்ற பொய்யை காலம் காலமாக சில மத்திய அமைச்சர்களும், மத்திய அரசு அதிகாரிகளும் மீண்டும், மீண்டும் கூறி வருவதன் காரணமாகவே உண்மை தெரியாத மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களின் பணி வரம்பு என்ன? என்பதையும், இந்தி நாட்டின் அலுவல் மொழி மட்டும் தான் என்பதையும் அவர்களுக்கு அவர்களின் உயரதிகாரிகள் புரிய வைக்க வேண்டும்.
கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.”
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஜிகர்தண்டா XX பட குழுவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த கிளிண்ட் ஈஸ்ட்வுட்!
’கருப்பர் நகரம்’ படத்தில் இருந்து வெளியேறியது உண்மை, ஆனால்… – கோபி நயினார் விளக்கம்!
CISF soldier insulted Chennai woman