“நீ என்ன பெரிய இவரா?” – நோயாளியை எட்டி உதைத்து, முகத்தில் குத்திய மருத்துவர்… சிம்லாவில் பரபரப்பு!

Published On:

| By Santhosh Raj Saravanan

doctor assaults patient shimla igmc hospital viral video suspended arjun pawar raghav narula

“மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்” என்று சொல்வார்கள். ஆனால், உயிரைக் காக்க வேண்டிய மருத்துவரே எமனாக மாறி, நோயாளியைத் தாக்கிய சம்பவம் இமாச்சலப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (IGMC), நோயாளி ஒருவரை மருத்துவர் ஒருவர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிப் புயலைக் கிளப்பியிருக்கிறது.

நடந்தது என்ன? சிம்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன் பவார் (Arjun Pawar). இவர் மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக, சிம்லாவில் உள்ள புகழ்பெற்ற அரசு மருத்துவமனையான ஐஜிஎம்சி-க்கு (IGMC) சிகிச்சைக்காகச் சென்றிருந்தார். அங்கு அவருக்குப் நுரையீரல் தொடர்பான ‘ப்ரோன்கோஸ்கோபி’ (Bronchoscopy) பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்ததும், சோர்வாக இருந்ததால் அங்கிருந்த ஒரு காலி படுக்கையில் படுத்து ஓய்வெடுத்துள்ளார்.

ADVERTISEMENT

அப்போது அங்கு வந்த சீனியர் ரெசிடென்ட் மருத்துவர் ராகவ் நருலா (Dr. Raghav Narula), “இங்க எதுக்கு படுத்திருக்க? யார் நீ?” என்று ஒருமையில் (“Tu”) பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அர்ஜுன் பவார், “ஏன் இப்படி மரியாதையில்லாமல் பேசுகிறீர்கள்? உங்கள் வீட்டிலும் இப்படித்தான் பேசுவீர்களா?” என்று கேட்டுள்ளார்.

வைரலாகும் வீடியோ: இந்தக் கேள்வியால் ஆத்திரமடைந்த மருத்துவர், படுக்கையில் படுத்திருந்த அர்ஜுன் பவாரை நோக்கிப் பாய்ந்து, அவரது முகத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். கூடவே இருந்த மற்றொரு நபர், நோயாளியின் கால்களைப் பிடித்துக்கொள்ள, மருத்துவர் தொடர்ந்து தாக்கியது அங்கிருந்தவர்கள் எடுத்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. நோயாளி தன்னைத் தற்காத்துக்கொள்ளக் கால்களால் உதைப்பதும் அந்த வீடியோவில் தெரிகிறது. இந்தத் தாக்குதலில் அர்ஜுன் பவாரின் மூக்கில் ரத்தம் கொட்டியது.

ADVERTISEMENT

பொங்கி எழுந்த மக்கள்: இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியதை அடுத்து, நோயாளியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். மருத்துவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிரடி நடவடிக்கை: நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாநில அரசு உடனடியாகத் தலையிட்டது. முதற்கட்ட விசாரணையில் மருத்துவர் ராகவ் நருலா செய்தது தவறு என்று தெரியவந்ததால், அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspended) செய்யப்பட்டார். மேலும், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தானி ராம் ஷாண்டில் (Dhani Ram Shandil), “மருத்துவரின் இந்தச் செயல் வெட்கக்கேடானது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்துள்ளார்.

மருத்துவர்களுக்குப் பணிச்சுமை இருப்பதும், நோயாளிகளுக்கு வலி இருப்பதும் இயல்புதான். ஆனால், ஒரு அரசு மருத்துவமனையில், அதுவும் படுக்கையில் இருக்கும் நோயாளியை ஒரு மருத்துவர் மிருகத்தனமாகத் தாக்குவது என்பது மருத்துவத் துறைக்கே களங்கம் விளைவிக்கும் செயலாகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share