வயது அதிகரிக்கும்போது முகத்தில் சுருக்கங்கள், கருவளையம், சரும வறட்சி போன்ற மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது.
ஆனால், தினசரி சருமப் பராமரிப்பில் சில எளிய மசாஜ் முறைகளைச் சேர்த்துக்கொள்வது முகத்தின் பொலிவை பராமரிக்க உதவும். அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்கள் மட்டுமே தேவை என்பதில்லை.
பாதாம் எண்ணெய் முதல் கற்றாழை வரை
விட்டமின் E நிறைந்த பாதாம் எண்ணெயை பயன்படுத்தி முகத்தை மெதுவாக மசாஜ் செய்யலாம். இது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க உதவுவதுடன், வறண்ட சருமத்துக்கும் ஏற்றதாகக் கூறப்படுகிறது.
வறண்ட சருமம் இருப்பவர்கள் தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம். சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க இது உதவும். எண்ணெய் பசை அதிகமாக உள்ள சருமத்துக்கு ஜோஜோபா எண்ணெய் ஒரு தேர்வாக இருக்கலாம்.
கரும்புள்ளிகளுக்கும் ஒரு வழி
குங்குமாதி தைலம் அல்லது விட்டமின் C சீரம் கொண்டு மென்மையாக மசாஜ் செய்வது கரும்புள்ளிகள் மற்றும் சருமப் பொலிவு தொடர்பான பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. முகப்பரு மற்றும் எண்ணெய் பசை உள்ளவர்களுக்கு கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.
பச்சைப் பால் அல்லது தயிரைக் கொண்டு மசாஜ் செய்வதும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவா ஷா, ஜேட் ரோலர் பயன்படுத்தலாமா?
அழகு பராமரிப்பில் பிரபலமாகி வரும் குவா ஷா (Gua Sha), ஜேட் ரோலர் (Jade Roller) போன்ற கருவிகளையும் முக மசாஜுக்கு பயன்படுத்தலாம். குவா ஷா முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதாகவும், ஜேட் ரோலர் கண்களுக்குக் கீழே ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது.
கருவிகள் எதுவும் இல்லாதவர்கள் சுத்தமான கைகளைக் கொண்டே முகத்தில் மெதுவாக மேல்நோக்கி மசாஜ் செய்யலாம். அதிக அழுத்தம் கொடுக்காமல் செய்வதே முக்கியம். சருமத்திற்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்வதுடன், ஒவ்வாமை (Allergy) ஏற்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
