ராஜன் குறை DMK political paradigm
மன்னராட்சி மறைந்து அல்லது மன்னரின் அதிகாரம் வெகுவாகக் குறைக்கப் பட்டு குடியரசு என்ற சட்டத்தின் ஆட்சியும், மக்கள் பிரதிநிதிகளின் அரசும் தோன்றியபோது பல முக்கிய கேள்விகள் எழுந்தன. மக்கள் பிரதிநிதிகள் எப்படி தேர்ந்தெடுக்கப் படுவார்கள், அவர்கள் எப்படி அரசமைப்பார்கள் என்பவை முக்கியமானவை.
முதலில் மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் குடிமைச் சமூக பிரதிநிதிகளாகத்தான் இருந்தார்கள். குடிமைச் சமூகம் என்றால் நில உடமையாளர்கள், தொழில் முனைவோர், வர்த்தகர்கள், கணிசமான வருவாய் ஈட்டி வரி செலுத்துபவர்கள், கல்வித் துறையினர் உள்ளிட்டவர்கள் எனலாம். குறைந்த வருவாய் கொண்ட அல்லது ஏழைத் தொழிலாளர்கள், கூலிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், பணியாளர்கள் என பலருக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை. அப்படி குடிமைச் சமூகத்திலிருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அவர்கள் அரசியல் கட்சிகளாக தங்களை அணி சேர்த்துக்கொண்டு ஆட்சியமைப்பது என்பது வழக்கமானது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா 1776-ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த பிறகு, அதற்குப் பதிமூன்று ஆண்டுகள் கழித்து 1789-ஆம் ஆண்டு ஃபிரெஞ்சுப் புரட்சி வெடித்த பிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவ்வாறான குடிமைச் சமூக பிரதிநிதித்துவ அரசியல் என்பது ஒரு திட்டவட்டமான வடிவமெடுத்தது. அதற்கு தொழிற்புரட்சி, ரயில் போக்குவரத்து, அச்சு ஊடகம் பரவலானது ஆகியவை முக்கிய காரணங்களாயின.
சரியாகச் சொன்னால் மன்னராட்சியிலும் மன்னர் அமைச்சர்கள், மத குருமார்கள், நிலப்பிரபுக்கள் அல்லது குறுநில மன்னர்கள் அவை என பலரையும் கலந்துகொண்டுதான் செயல்பட்டார். ஆனால் அந்த கலந்தாலோசனைகள் சரியான சட்ட வடிவம் பெறவில்லை. இங்கிலாந்தில் பதிமூன்றாம் நூற்றாண்டில் மன்னருடன் பிரபுக்கள் போட்டுக் கொண்ட ஒப்பந்தமான மாக்ன கார்டா என்பது ஒருவிதமான சட்ட முன்மாதிரி. இதைத்தொடர்ந்து பார்லிமெண்ட் என்ற பிரபுக்கள் அமர்ந்து விவாதிக்கும் அவை உருவானது. பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டில் முதலீட்டியம் உருவானபோது குடியரசு என்ற சட்ட த்தின் ஆட்சியும், பிரதிநித்துவ ஆட்சியும் விரிவாக்கம் பெற வேண்டிய தேவை ஏற்பட்டது. குடிமைச் சமூக பிரதிநிதித்துவம் அதிகரித்த போது எந்த அளவு மாற்றங்களைச் செய்யலாம் என்பதை ஒட்டி சில கொள்கைகள், கோட்பாடுகள் சார்ந்து இயங்கும் கட்சிகள் உருவாயின. அரசியல் கட்சிகள் என்றாலே அவை குடிமைச் சமூக க் கட்சிகள், அதாவது சொத்துக்களும், கணிசமான வருவாயும் கொண்ட செல்வந்தர்கள், கற்றறிந்தவர்கள் என்று சொல்லக்கூடிய ஆண்களின் அமைப்புகளாக அவை இருந்தன. DMK political paradigm

இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை, வயது வந்தவர்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை போன்ற கோரிக்கைகள் வலுப்பெற்று பல்வேறு நாடுகளில் நடைமுறைக்கு வந்தன. இதுதான் மக்களாட்சிக்கு ஒரு வெகுஜன பரிமாணத்தை வழங்கியது. இருபத்தோரு வயதோ, பதினெட்டு வயதோ ஆன ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் அனைவரும் குடிநபர்கள், சமமானவர்கள், அவர்கள் அனைவருக்கும் ஒரு ஓட்டு என்ற புரட்சிகர நடைமுறை உருவானது. “எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் இந்நாட்டு மக்கள்” என்று பாரதி கூறியது போல மக்களாட்சி அனைத்து மக்களும் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து தங்களையே ஆண்டுகொள்வதாக மாறியது. இந்தியக் குடியரசு 1950-ஆம் ஆண்டு உருவானபோதே, இப்படி வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, Univesal Adult Suffrage என்ற அடிப்படையில் உருவானது. இது அரசமைப்பில் மிகப்பெரிய புரட்சி என்றால் மிகையாகாது.
ஆனால் இந்த புரட்சிகர செயல்முறையில் அதிகாரம் பரவலாக வேண்டுமென்றால் சாமானிய மக்களும் அரசியலில் பங்கெடுக்க வேண்டும். அவர்களும் ஆட்சி செய்வது சாத்தியமாக வேண்டும். என்ன பெரிய சிக்கல் என்றால் நிலவுடமையாளர்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் சுலபமாக பணம் செலவு செய்து தேர்தலில் பிரசாரம் செய்யலாம்; அவர்களே மக்கள் பிரதிநிதிகளாக வெற்றி பெறலாம். அல்லது அவர்கள் ஒரு சிலரை ஆதரித்து வெற்றி பெறச்செய்யலாம். அப்படி நடந்தால் ஆட்சி சாமானிய மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளாது. அனைத்து பிரிவினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தாது. அப்போது சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் தோன்றுவதும், அவர்கள் தேர்தல் களத்தில் மோதி வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தில் பங்கு பெறுவதும் அவசியம். DMK political paradigm
இவ்வாறான வெகுஜன அரசியல் கட்சிகள் உருவாகும்போது அவை குடிமைச் சமூக கட்சிகள் போல இயங்க முடியாது. அந்த கட்சிகளில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகள், மாறுபட்ட வாழ்நிலைகள் கொண்ட மக்கள் தொகுதிகள் இணைந்து இயங்கலாம் என்பதால், கட்சியின் தலைமை என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறும். எவர் ஒருவர் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் சிறப்பாக வகுத்து, பேசி அனைத்து மக்களையும் அணி திரட்டும் ஆற்றலுடன் இருக்கிறாரோ அவரே கட்சியின் தலைவர் ஆவார். சுருங்கச் சொன்னால் ஒரு வெற்றிகரமான வெகுஜன கட்சிக்கு தேவையானவை: நல்ல கட்சி கட்டமைப்பு, அந்த கட்டமைப்பை காத்து நிற்கும் கொள்கை, கோட்பாடு, அந்த கட்சியமைப்பை வழி நடத்தும் தலைமை. ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூகத்தில் பல்வேறு பிரிவினைரை ஒருங்கிணைக்கும்போது கட்சித் தலைமை என்பது ஒற்றுமையின் உருவகமாக மாறுவது இயல்பு. DMK political paradigm
இப்படி வலுவான ஒருவர் தலைவர் மக்களை ஈர்ப்பவராக, கட்சியனரின் முழுமையான பின்பற்றுதலை உறுதி செய்பவராக மாறும்போது அவரிடம் பழைய மன்னராட்சி போல ஒரு இறையாண்மைப் பண்பு உருவாகத்தான் செய்யும். ஆனால் அந்த இறையாண்மைக் கூறு மட்டுமே மன்னராட்சி ஆகிவிடாது. ஏனெனில் கட்சித் தலைவர் தொடர்ந்து கட்சியின் முரண்பாடுகளையும், சமூக முரண்பாடுகளையும் வெற்றிகரமாகக் கையாண்டால்தான் அவர் தலைவராகத் தொடர முடியும். தேர்தல்களில் வெல்ல முடியும். அப்படி ஒருவர் தலைவராக உருவாகிவிட்டால் அவருக்குப் பின் அடுத்த தலைவர் அவர் இடத்திற்கு வருவது சவாலானது. அதனால் இந்திய வெகுஜன அரசியல் கட்சிகள் தலைவரின் உயிரியல் வாரிசை தலைவராக்கும் நடைமுறையை கைக்கொள்கின்றன. வெறும் உயிரியல் வாரிசாக இருந்தால் மட்டும் போதாது. கொள்கை, கோட்பாடுகளின் வாரிசாகவும் இருக்க வேண்டும். கட்சியினை ஒருங்கிணைத்து வழி நடத்தும் திறனைப் பெற வேண்டும். அப்போதுதான் அந்த தலைமையின் தொடர்ச்சி வெற்றிகரமாகச் செயல்படும். கட்சி கலகலத்துப்போனால் தலைவராக இருந்து ஒரு பயனுமில்லை. DMK political paradigm

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முழுமையான முன்னுதாரணம்
இந்தியக் குடியரசு உருவானபோதே உருவானதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். சமூக நீதியும், கூட்டாட்சியமும் இதன் இரு முக்கியக் கொள்கைகளாக உருவாயின. சாமானியர்களின் நலன், தமிழர்களின் சுயாட்சி உரிமைகள் கோட்பாடுகளாயின. இவற்றிற்கு உருவம் கொடுத்து கோட்பாட்டக்கம் செய்யும் வல்லமை மிக்க தலைவராக அறிஞர் அண்ணா விளங்கினார். பெரியார் உருவாக்கியிருந்த சுயமரியாதை, பகுத்தறிவு நிறைந்த அணிகளிலிருந்து அண்ணா கட்சிக்கான கட்டமைப்பை உருவாக்கினார். அவருக்கு உறுதுணையாக தீவிரமாக இயங்கும் ஆற்றல் பெற்ற கலைஞர் உள்ளிட்ட இளைஞர்கள் விளங்கினர். அதனால் குடிமைச் சமூகத்திற்கு வெளியிலிருந்த சாமானியர்களை அணிதிரட்டிய இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் உலக அளவில் ஒரு முன்மாதிரியான வெகுஜன கட்சியாகப் பரிமாணம் கொண்டது.
வலுவான கட்சிக் கட்டமைப்பு, கோர்வையான கொள்கை, கோட்பாடு, சீரிய தலைமை எல்லாம் அமையப்பெற்ற வெகுஜன கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் விரைவாக வளர்ந்து பதினெட்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியது மட்டுமன்றி, தமிழ்நாட்டு மக்களை திராவிட தமிழ் மக்கள் என்ற மக்கள் தொகுதியாகக் கட்டமைப்பதிலும் வெற்றி பெற்றது. தமிழ்நாடே கலங்கிய அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அவருடன் தோளோடு தோள் நின்று கட்சியை வளர்த்திட்ட கலைஞர் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பேராற்றலுடன் ஐம்பதாண்டுகாலம் கட்சியை வழிநடத்தினார் என்பது அபூர்வமான வரலாற்றுச் சாதனை. அதன் விளைவாக அவரது கொள்கை வாரிசாகவும், உயிரியல் வாரிசாகவும் அவரிடமே நாற்பதாண்டுகாலம் அரசியல் பயின்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கட்சியெனும் மரக்கலத்தை அதன் வரலாற்றுப் பயணத்தில் தொடர்ந்து வெற்றிகரமாகச் செலுத்தி வருவது பிற இந்தியக் கட்சிகளுக்கு அமையாத எழுபத்தைந்து ஆண்டுகால வரலாறாகும். DMK political paradigm

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்: தடுமாறும், தடம் மாறும் கலம்
அண்ணா ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த இரு ஆண்டுகளிலேயே மறைந்தபின், அதற்கடுத்த தேர்தலில் கலைஞர் தலைமையில் தி.மு.க தேர்தலில் கிட்ட த்தட்ட ஐம்பது சதவீத வாக்குகளைப் பெற்று பெருவெற்றி கண்டது. அந்த நிலையில் கலைஞருடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் கட்சியை இரண்டாகப் பிளந்து அண்ணா பெயரில், அண்ணாவின் உருவத்தைக் கொடியில் பொறித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். கொள்கைகளில் தி.மு.க கொள்கைகளையே மென்போக்காகக் கொள்வதும், ஒன்றிய அரசை ஆள்பவர்களுடன் அனுசரணையான போக்கை மேற்கொள்வதும் அவரது பாணியாக இருந்தது. திராவிட அரசியலில் அதிகம் இந்திய ஒன்றியத்துடன் சார்ந்தியங்கும் பகுதியாக மாறினார் எனலாம். அண்ணா தி,மு.க அதிக தேர்தல்களில் வென்றதாகத் தோன்றினாலும் அவ்வெற்றிகள் ஒவ்வொரு தேர்தலிலும் நிலவிய சந்தர்ப்பங்களினால் விளைந்தவை என்பதை விரிவாக ஆராய்ந்தால் காண முடியும். DMK political paradigm
வேர் மட்ட த்தில் தி.மு.க அணியினருடன் முரண் கொண்டவர்கள், எதிரிகளின் புகலிடமாக இருந்ததால் அரசியல் என்பது எதிரி, நண்பன் வேறுபாடே என்று கார்ல் ஷ்மிட் கூறியது போல தி.மு.க-வின் திராவிட எதிர் அணியாக ஒரு கட்டமைப்பை அ.இ.அ.தி.மு.க பெற்றது. இப்படி கட்டமைப்பு, கொள்கை இரண்டிலும் தி.மு.க-வின் இரட்டையாக இருந்து வந்துள்ள அ.இ.அ.தி.மு.க-வின் முக்கியமான பிரச்சினை தலைமைத் தொடர்ச்சி எனலாம்.
எம்.ஜி.ஆர் இறந்தபோது கட்சி பிளந்து பின்னர் ஜெயலலிதா தலைமையில் இணைந்தது. ஆனால் ஜெயலலிதா இறந்த போது பாஜக பெருமளவு கட்சியை சிதைத்துவிட்டது. மொத்த கட்சியும் முதலில் சசிகலாவை தலைமை ஏற்க அழைத்தது. பாஜக ஓ.பன்னீர்செல்வத்தைத் தூண்டிவிட்டு கட்சியை உடைத்தது; சசிகலா பழனிசாமியை முதல்வராக்கி சிறை சென்றார். டிடிவி தினகரன் தலைமையேற்க முனைந்தார். பாஜக அவரை முடக்கியது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரையும் இணைத்து இரட்டைத் தலைமை என்றது. ஆட்சி போனவுடன் அதையும் பழனிசாமி உடைத்தார்; ஓபிஎஸ்-சை வெளியேற்றினார். ஆனால் இப்போது பாஜக எல்லோரையும் வளைத்துப் பிடித்து கூட்டணி என்கிறது. DMK political paradigm
இத்தனை குழப்பங்கள், யூடர்ன்களுக்குப் பிறகு தலைமையின் தொடர்ச்சி என்பது சுத்தமாக அறுபட்டுவிட்டது. எடப்பாடி பழனிசாமி கட்சிப்பணியில் முன்னின்று கட்சியினர், மக்கள் ஆதரவில் தலைவர் ஆனவர் அல்ல. முதல்வர், தலைவர் ஆன பிறகும் அவரால் கொள்கையோ, கோட்பாடோ பேச இயலவில்லை. திராவிடம் என்ற அடையாளத்தையே பேச அஞ்சுகிறார். தி.மு.க-வை வீழ்த்துவது மட்டுமே கொள்கை என்கிறார். ஏன் வீழ்த்த வேண்டும் என்றால் ஊழல் என்று சிரிக்காமல் சொல்கிறார். DMK political paradigm
அவர் முதல்வராக தேர்வானபோது தவழ்ந்து போய் விழுந்தது உச்ச நீதிமன்றத்தால் ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட சசிகலாவின் காலில். எப்படியாவது அவர் பலவீனத்தைப் பயன்படுத்தி கூட்டணி ஆட்சி என்ற பெயரில் காலூன்ற பாஜக துடிக்கிறது. அடுத்தபடி பழனிசாமிக்கு எதிராக தூண்டிவிட செங்கோட்டையனை தயார் செய்து வைத்துள்ளது. திசையற்று அடித்துச் செல்லப்படும் உடைந்த கப்பலின் மேல் நின்று வீரவசனம் பேசுகிறார் பழனிசாமி. DMK political paradigm

மோடியை ஓய்வெடுக்கச் சொல்கிறதா ஆர்.எஸ்.எஸ்?
பல மாநிலக் கட்சிகளை உடைத்து விழுங்கும் பாஜகவிலேயே தலைமைச் சிக்கல் உருவாகியுள்ளதுதான் முக்கியமான செய்தி. பாஜக ஆர்.எஸ்.எஸ் கட்டமைப்பின் வலுவில் இயங்கும் கட்சி. சங்க பரிவாரம் என்று அழைக்கப்படும் அந்த அமைப்புகளின் இலட்சியமே தங்களது இந்துத்துவக் கொள்கையே தனி நபர்களைவிட முதன்மையானது என்று நிறுவுவதுதான். DMK political paradigm
அடிப்படையில் பதினெட்டாம் நூற்றாண்டுடன் முடிவுற்ற மராத்திய பார்ப்பனீய பேஷ்வா ஆட்சியின் நினைவேக்கத்தில் உருவானதுதான் சங்க பரிவாரம். அவர்கள் கட்டமைப்பின் உறுதிக்கும், கொள்கைக்குமே முக்கியத்துவம் தருவதால் மற்ற வெகுஜன கட்சிகளைப் போல தலைமைக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது என்று கருதுபவர்கள். நரேந்திர மோடி குஜராத் மாநில அடையாளத்தைப் பேசி முன்னிலை பெற்ற மாநில அரசியல்வாதி. குஜராத் பெருமூலதனம் அவருக்கான பெரும் பிம்பக் கட்டமைப்பை அகில இந்திய அளவில் செய்தது. அதனால் பிரதமர் வேட்பாளரானதுடன், ஆட்சியையும் பிடித்தார். அதனைப் பின் தொடர்ந்து மோடி-அமித்ஷா என்ற இரட்டையரின் தலைமைப் பிம்பம் கட்சியைவிடப் பெரிதாக முன்வைக்கப்பட்டு வந்தது. அது சங்க பரிவாரத்தின் அடிப்படைகளுக்கு உகந்ததாக இல்லை என்பதுடன், அந்த பிம்பமும் தேய்ந்து வருகிறது.
மூன்றாவது முறை நானூறு தொகுதிகள் வெல்வோம் என முழக்கமிட்டுவிட்டு நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனபோதே மோடியின் தலைமை பலவீனமடைந்தது தெளிவானது. என்னதான் ராமர் கோயில், காஷ்மீர் விசேஷ அந்தஸ்து நீக்கம். முத்தலாக் தடை சட்டம். பொருளாதார நலிவுற்ற ஆதிக்க ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு என்று சங்க வேலைத்திட்ட த்தை நிறைவேற்றினாலும், அவற்றை மக்களை ஏற்கச் செய்வதில் வெற்றி பெற முடியவில்லை. DMK political paradigm
அயோத்தியா ராமர் கோயில் உள்ள தொகுதியிலேயே பாஜக தோற்றுவிட்டது. வாரணாசியில் மோடியின் வாக்கு வித்தியாசம் குறைந்துவிட்டது. இந்த நிலையில் வலுவிழக்கும் தலைமை பிம்பத்திற்காக கொள்கைக் கட்சி என்ற பிம்பத்தை இழப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது. செப்டம்பர் மாதம் மோடிக்கு 75 வயதாவதால், அந்த எழுதப்படாத விதியைக் காரணம் காட்டி அவரை விலகச் செய்தால் கட்சியில் கொள்கையே பெரிது என்ற பெயராவது தங்கும் என ஆர்.எஸ்.எஸ் கருதலாம் எனத் தோன்றுகிறது. இந்திய வெகுஜன அரசியலில் கட்சித் தலைமை குறித்த கேள்விகளுக்கு இது முக்கியமான பரிமாணத்தை வழங்குகிறது எனலாம். DMK political paradigm
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
