மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. டெல்லியில் இன்று சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நாம் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்திக்க கனிமொழி மற்றும் டிஆர்.பாலு ஆகியோர் அப்பாயிண்ட்மென்ட் வாங்கி உள்ளனர் என்று தெரிவித்தனர்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் கூட்டணி ஆட்சி, அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் எனவும் பேசியதால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பும் ஏற்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், கூட்டணி குறித்து டெல்லி மேலிடம் எடுக்கும் முடிவையே தமிழ்நாடு காங்கிரஸ் பின்பற்ற வேண்டும்; பொதுவெளியில் கூட்டணி குறித்து யாரும் பேசக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபாலை சந்திக்க திமுக பொருளாளர் டிஆர் பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் அப்பாயிண்ட்மென்ட் வாங்கி உள்ளனர்.
