டிஜிட்டல் திண்ணை: Don’t Worry Brother.. ஸ்டாலினுக்கு மோடி தந்த ‘அந்த’ வாக்குறுதி- டெல்லியில் நடந்தது என்ன?

Published On:

| By Minnambalam Desk

Delhi MK Stalin

வைஃபை ஆன் செய்ததுமே முதல்வர் ஸ்டாலினின் டெல்லி விசிட் பற்றி இத்தனை தகவல்களா? என ஆச்சரியத்துடன் வாட்ஸ் அப் டைப் செய்ய தொடங்கியது.

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனை முன்வைத்து காரசார விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை, விசாரணை நடைபெற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணமே இதனை மையமாக வைத்துதான் என அதிமுக, தவெக என எதிர்க்கட்சிகள் விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. திமுக தரப்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இதற்கு பதிலடி தந்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின், “டெல்லிக்குச் சென்றேன்; தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன்! ரெய்டுகளுக்குப் பயந்து – சொந்தக் கட்சிக்காரர்களுக்குக்கூட தெரியாமல் டெல்லி சென்று – கட்சி அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன் என ஊடகங்களிடம் கூறி – பல கார்கள் மாறி – கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை! டெல்லி என்றாலே கிலி பிடித்து அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சியினரின் அடிவயிற்றில் புளியைக் கரைக்க வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டதை இரசித்தபடியே டெல்லி பயணம் அமைந்தது என்றும் பதிலளித்திருந்தார்.

சரி.. டெல்லியில் என்னதான் நடந்தது என முதல்வர் ஸ்டாலின் தரப்பிலும் பிரதமர் அலுவலக வட்டாரங்களிலும் நாம் விசாரித்தோம்.

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தின் போது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை தனியாகவும் சந்தித்தார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியை தனியே சந்தித்துப் பேச இந்த மாநிலங்களின் முதல்வர்களுக்கு 5 முதல் 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின் போது கோவை- மதுரை மெட்ரோ திட்டங்கள், விமான நிலையங்கள் விரிவாக்கம், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் பறக்கும் ரயில் திட்டம் ஒப்படைப்பு, செங்கல்பட்டு- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக்குதல், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை, கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்ப்பது, தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மோடியிடம் வலியுறுத்தினார் ஸ்டாலின்.

இதன் பின்னர், கல்வித் துறைக்கான ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்திவிட்டது.. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை ஒதுக்க முடியும் என்கிறார் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். இதனால்தான் ‘வேறுவழியே’ இல்லாமல் நாங்கள் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறோம் என்பதையும் மோடியிடம் ஸ்டாலின் அழுத்தமாக சொன்னாராம்.

இதற்கு, “முன்னர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி கேட்டீங்க.. அதனை ரிலீஸ் செய்து கொடுத்தேன்.. இப்பவும் Don’t Worry Brother.. இந்த கல்வி நிதியையும் நான் ரிலீஸ் செய்கிறேன்” என ஸ்டாலினிடம் உறுதியளித்தாராம் பிரதமர் மோடி.

இதனடிப்படையில்தான் டெல்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், கல்வி நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்பிக்கை இருக்கிறது என ஸ்டாலின் கூறினார்.

மேலும் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கொள்கை ரீதியான மோதல்கள் இருந்தாலும் ‘நிர்வாக’ ரீதியாக ஓரளவுக்கு இணக்கமான உறவு இருந்து வருகிறது.

இதற்கு ஒரு பின்னணியும் இருக்கிறது.. கேபினட் செகரட்டரியாக இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டிவி சோமநாதன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வராக ஸ்டாலின், பதவி வகித்த காலத்தில் பணிபுரிந்த அதிகாரி. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை டெல்லியில் சந்தித்தால், முதல்வர் எப்படி இருக்கிறார்? என நலம் விசாரித்துவிட்டு முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறையை ரொம்பவே நெகிழ்வுடன் பாராட்டிப் பேசுவாராம்.

அத்துடன், “ஸ்டாலின் பிரதர் அழகிரியால் ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு பிரச்சனை வந்தது; அப்போது பிரதர் என்றெல்லாம் பார்க்காமல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பக்கம் நின்று சிஎம்மாக இருந்த கருணாநிதியிடம் பேசி பிரச்சனையை சரி செய்தார் ஸ்டாலின்.. அந்த அளவுக்கு அதிகாரிகளுக்கு ஆதரவாக இருப்பவர்” என சில சம்பவங்களையும் நினைவு கூர்ந்து சொல்வாராம் கேபினட் செகரட்டரி சோமநாதன்.

அதேபோல பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் பேசும் போதும் முதல்வர் ஸ்டாலினின் அப்ரோச் குறித்து பெருமையாக சொல்வாராம் சோமநாதன். இவை எல்லாம்தான் நிர்வாக ரீதியாக, ஓரளவுக்கு மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான இணக்கமான உறவுக்கு காரணமாம்.

மோடியுடனான சந்திப்புக்கு முன்னர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை ஸ்டாலின் சந்தித்து பேசியது தொடர்பாக விசாரித்தோம்.

சோனியாவுடனான சந்திப்பின் போது, பரஸ்பரம் நலன் விசாரித்த கையோடு, பாகிஸ்தான் மீதான Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; கடிதங்கள் அனுப்பி இருக்கிறோம். ஆனால் திமுக தரப்பில் இருந்து எங்கள் கோரிக்கைக்கு ஆதரவான குரல் இதுவரை வரவில்லையே என ஸ்டாலினிடம் சோனியாவும் ராகுல் காந்தியும் ஆதங்கமாக சொல்லியிருக்கின்றனர்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் தரப்பில், இது பற்றி நாங்கள் ஆலோசனை செய்கிறோம் என்று பதில் தரப்பட்டதாம்.

இந்த சந்திப்பு முடிந்த கையோடு டெல்லியிலேயே ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாராம். அதில், நம்மை ஏற்கனவே பிரிவினைவாதி, தனிநாடு கேட்கிறவங்க என்கிறார்கள்.. இப்பவும் மத்திய அரசுக்கு எதிராக கேள்வி கேட்கிறவங்க எல்லாம் பிரிவினைவாதி.. நாட்டை விட்டு வெளியேறனும் என்கிறார்கள் என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டதாம்

இதற்கு பதிலாக, அப்படி சொல்கிறவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.. நாம கூட சென்னையில் பேரணி நடத்தினோம்.. இப்பவும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கான இந்திய அரசின் குழு ஒன்றின் தலைவராக கனிமொழி சென்றிருக்கிறார்.. இதனால் பிரிவினைவாதிகள் என பேசுபவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் யார் தாக்குதல் நடத்தியது? ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையால் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனரா?அல்லது அழிக்கப்பட்டுவிட்டனரா?

இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திவிட்டது; இந்தியாவின் அனைத்துவிதமான தாக்குதலையும் பாகிஸ்தான் முறியடித்தது என்றெல்லாம் சர்வதேச மீடியாக்கள் தினமும் எழுதுகின்றன. இது பற்றி எல்லாம் மத்திய அரசிடம் நாமும் கேட்க வேண்டும்.. அதனால் காங்கிரஸ் கோரிக்கை சரிதான் எனவும் விரிவாகவே விவாதிக்கப்பட்டதாம்.

முதல்வர் ஸ்டாலினும் இதை ஏற்றுக் கொண்டு, Operation Sindoor விவகாரத்தில் இனி நாமும் ‘குரல்’ எழுப்புவோம் என்று சொன்னாராம்.. இதனால் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கைக்கு ஆதரவாக திமுக தரப்பில் இருந்தும் ஒரு அறிக்கை வெளியாகலாமாம்.

இன்னொரு தகவலும் இருக்கிறதே.. அது லேட்டாகிவிட்டாலும் லேட்டஸ்ட்தான்..

Operation Sindoor ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் மே 10-ந் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரணி நடத்துவதாக அறிவித்தார். பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், இந்த அறிவிப்பை ஆச்சரியத்துடன் கவனித்து வந்தனர்.

சென்னை பேரணி நடைபெற்ற நாளில் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு ராஜ்பவனில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அடுத்தடுத்து போனடித்துப் பார்த்துள்ளார். ஆனால் ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லையாம்.

இதனால் தலைமைச் செயலாளர் லைனுக்குப் போன ஆளுநர் தரப்பு, முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொள்ள முடியவில்லை; சென்னை பேரணியில் ஆளுநர் பங்கேற்க விரும்புகிறார் என்கிற தகவலை பாஸ் செய்திருக்கிறது.

இதனையடுத்து மீண்டும் முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். அப்போது முதல்வர் ஸ்டாலின், உங்கள் மீது திமுக தொண்டர்கள் ரொம்பவே கோபமாக இருக்காங்க.. இந்த நேரத்தில் நீங்க பேரணிக்கு வந்து ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிடக் கூடாது என நினைக்கிறேன்… என நாசூக்காக சொன்னாராம். இதனை புரிந்து கொண்ட ஆளுநர் தரப்பு சென்னை பேரணியில் பங்கேற்காமல் ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என வாழ்த்துச் செய்தி வெளியிட்டதாம் என டைப் செய்துவிட்டு Sent பட்டனை தட்டியபடியே ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share